பங்களாதேஷில் மற்றொரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு

Date:

பங்களாதேஷில் 10 நாட்கள் இடை வெளியில் மற்றொரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தேசிய மக்கள் கட்சித் தொண்டர்கள் நாடு முழுவதும் மீண்டும் வன்முறை, கலவரத்தில் ஈடு பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2009 முதல் 2024ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்தார். கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் அவர் பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த நாட்டில் 2026 பெப்ரவரி 12ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளன. இந்த கட்சி பொதுத்தேர்தலை முதல்முறையாக எதிர்கொள்கிறது. மேலும் பங்களாதேஷ் தேசியக் கட்சி, பங்களாதேஷ் ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் களமிறங்கி உள்ளன.

மாணவர் தலைவர் ஹாடி கொலை: இந்த சூழலில், கடந்த 12ஆம் திகதி இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவரும், டாக்கா-8 தொகுதியின் வேட்பாளருமான ஷெரீப் உஸ்மான் ஹாடி மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த 18ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரை சுட்டதாக சந்தேகிக்கப்படும் பைசல் கரீம் என்பவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து தேசிய மக்கள் கட்சித் தொண்டர்கள், பங்களாதேஷ் முழுவதும் வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சிறுபான்மையினரான இந்துக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மைமன்சிங் மாவட்டம் பலுகா பகுதியை சேர்ந்த தீபு சந்திர தாஸ் (30) அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

மேலும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் வீடுகள், அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தலைநகர் டாக்காவில் செயல்படும் சில ஊடக நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நாடாளுமன்ற வளாகம் உட்பட ஏராளமான பொது சொத்துகள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில், பங்களாதேஷின் 3வது பெரிய நகரான குல்னாவில் தேசிய மக்கள் கட்சி சார்பில் பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சியின் மூத்த தலைவரும் மாணவர் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான மொடாப் சிக்தர், கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

குல்னாவில் உள்ள சிக்தரின் வீட்டில் நேற்று மதியம் நுழைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். “சிக்தரின் இடது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அதனால், மிகப்பெரிய பாதிப்பு இல்லை. தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாடியை தொடர்ந்து, மற்றொரு மாணவர் தலைவரான சிக்தர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பங்களாதேஷில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘யூனுஸ் அரசை கவிழ்ப்போம்’: இதற்கிடையே, டாக்காவில் செய்தியாளர்களிடம் இன்கிலாப் மஞ்சா மாணவர் அமைப்பின் செயலாளர் அப்துல்லா அல் ஜாபர் நேற்று கூறும்போது, “ஹாடி கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு அல்லது பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்ட் பொலிஸ் மூலம் கொலை வழக்கை விசாரிக்க வேண்டும். எங்கள் தலைவரின் மரணத்துக்கு நீதி கிடைக்காவிட்டால், யூனுஸ் அரசை கவிழ்ப்போம்’’ என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...

அர்ச்சுனாவின் உளறு வாய்க்கு பெரும் ஆப்பு: நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்