-கருணாகரன்-
மாவீரர் நாளை நினைவு கொள்ளுதல் பற்றிய அறிவிப்புகள் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி வருகின்ற அறிவிப்புகளில் பெரும்பாலானவையும் மாநகரசபை, நகரசபை, பிரதேச சபைகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களாகவே உள்ளன. (கட்சிகளும் தலைவர்களும் வாயைத் திறக்கக் காணோம்!)
அங்கெல்லாம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தங்களுடைய அறிவிப்புகளாகவும் அறிவுறுத்தல்களாகவும் மடை மாற்றிக் குறித்த சபைகளின் முதல்வர்களும் தவிசாளர்களும் விடுக்கின்றனர்.
இதன்மூலம் தங்களுடைய அரசியல் அடையாளத்தையும் இருப்பையுமே முதல் நிலைப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கு அவர்கள் தங்களுடைய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்வது வேறு. இந்தச் சூதான அரசியல் முதன்மைப்பாட்டுக்கு பொது ஊடகங்களான பத்திரிகைகள் மற்றும் இலத்தினரனியல் ஊடகங்களில் இடமளிப்பது வேறு. அதற்குத் துணை நிற்கும் ஊடகவியலாளர்கள் இவற்றைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
இதில் இன்னொரு சிரிப்புக்கிடமான – விசேசமான விடயம் என்னவென்றால், மாவீர்ர்நாள் நினைவு கொள்ளல் காலப்பகுதியில் இறைச்சிக்கடைகளையும் மதுச்சாலைகளையும் மூடிவிடுமாறு குறித்த தவிசாளர்கள் கோரிக்கை விடுக்கிறார்களாம்! சிரிப்பு வருகிறதா? இவை இரண்டிற்குமான வரியிறுப்பைச் செய்வதே இந்தச் சபைகள்தான். என்பதால் இவற்றுக்கும் இந்தச் சபைகளுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. மட்டுமல்ல, ஒரு பிரதேசத்தில் ஆகக்கூடியது 40 க்கு மேற்பட்ட இறைச்சிக்கடைகள் இருக்க முடியாது. நகரசபைகளில் அல்லது மாநகரசபைகளில் சற்றுக் கூடுதலாக இருக்க முடியும். வேண்டுமானால் மதுச்சாலைகள் மட்டும் இதை விடக் கூடுதலாக இருக்கலாம். அதுதானே விளைந்து போய்க்கிடக்கிறது!
எவ்வளவுதானிருந்தாலும் இவற்றுக்குத் தனியான ஒரு கடிதம் மூலம் அறிவுறுத்தலை விடுத்து இவற்றை மூடலாம். இதற்கெனத் தனியான முறையில இப்படிப் பொது அறிவிப்பை விடுக்கத் தேவையில்லை. மற்றது, இறைச்சிக்கடைகளின் உரிமையாளுக்கும் மதுச்சாலையினருக்கும் மாவீர்ர் நாளின் முக்கியத்துவமும் பெறுமதியும் தெரியாதா? அதைத் தவிசாளர்கள் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா? அல்லது இப்படிப் பகிரங்க அறிவிப்பு விட்டுத்தான் அவற்றை மூட வைக்க வேணுமா? இதன்ன படங்காட்டல்?
அதை விட இறைச்சிக்கடைகளை ஏன் மூட வேண்டும் என்று தெரியவில்லை!
இறைச்சியும் மதுவும் ஒன்றா? இறைச்சிக்கடைகளை மூடுவது புனித நாள் என்று சொல்லப்படும் மாவீரர் நினைவு கொள்ளல் காலப்பகுதியில் அவசியமா? இறைச்சி விலக்கப்பட வேண்டியதா? அது உணவு அல்லவா! அதை எப்படித் தடுக்க முடியும்?
மதுச்சாலைகளை மூடுவது நியாயம். இறைச்சிக்கடைகள் அப்படியல்லவே! இறைச்சி, மரக்கறியைப்போல ஒரு உணவு வகையே! அதை எப்படி சமூக வெளியிலிருந்து மறுதலிக்க முடியும்?
பூரணை நாளில் கொல்லாமை பின்பற்றப்பட வேண்டும் என்று இலங்கை (சிங்கள பௌத்த) அரசு கடைப்பிடித்து வரும் நடைமுறையை அப்படியே கேள்வியின்றிப் பின்பற்றி வருகின்ற மனநிலையின் வெளிப்பாடு இது? பூரணை நாட்களில் (பௌர்ணமி தினங்களில்) இலங்கை அரசின் விமானப்படை குண்டுகளை வீசித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. படையினர் எறிகணைகளை எய்திருக்கிறார்கள். படையெடுப்புகள் வேறு நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதன்போதெல்லாம் மக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மக்களைக் கொல்வதற்குப் பூரணை நாள் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், உணவுக்காக ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் கொல்லக் கூடாது. என்னவொரு கருணை? இத்தகையதொரு நகைச்சுவையான தீர்மானமே இங்கும் காணப்படுகிறது.
இதற்கு அப்பால் உள்ளுராட்சி மன்றுகளில் தீர்மானம் நிறைவேற்றித்தான் மாவீர்ர் நாளை நினைவு கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைமை தமிழ்ச் சமூகத்துக்கு வந்திருக்கிறது என்பது அடுத்துக் கவனிக்க வேண்டியது.
முன்பு சில கட்சிகள் அல்லது சில அரசியல் பிரமுகர்கள் மாவீரர் நாளைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் அரசியல் நலனிற்குள்ளும் வைத்திருக்க முயற்சித்தனர். (அண்ணன் இல்லாத இடத்தில் தம்பி சண்டியனாம்!).
அதற்குச் சமூகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகளை அடுத்து, அவர்களும் அவர்களுடைய கட்சிகளும் அவற்றிலிருந்து சற்றுக் கவலையோடு பின்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த இடத்தை இப்பொழுது உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களும் முதல்வர்களும் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். தாங்களே தலைவர்களைப் போலவும் தளபதிகளைப் போலவும் கருதிக் கொண்டு, படங்காட்டுகிறார்கள். அதற்கு ஊடக வெளிச்சம் வேறு.
இவ்வளவுக்கும் இந்தச் சபைகளிற் பலவும் பல்வேறு விதமான கேள்விகளுக்கு முன்னே நிற்கின்றன. சபையைப் பொறுப்பேற்ற பின் இவர்கள் உருப்படியான முறையில் ஆற்றிய பணியை – பங்களிப்பைச் சொல்லட்டும் பார்ப்போம்.
இந்தச் சபைகளின் முதல்வர்கள், தவிசாளர்களில் பலரும் வினைத்திறனிலும் நேர்மையான மக்கள் நலச் செயற்பாட்டிலும் ஊழலற்ற நிர்வாகத்திலும் தோற்றுப்போனவர்கள்; இயலாமையோடு உள்ளவர்கள். அந்தக் குறைபாடுகளையெல்லாம் மறைத்துக் கொள்வதற்காக இந்த மாதிரி (மாவீரர் நாள் போன்ற) உணர்வு பூர்வமான விடயங்களைக் கையில் எடுத்து விளையாடுகிறார்கள். மக்களும் இந்த உணர்வு பூர்வமான விடயங்களில் தங்களைப் பிணைத்திருப்பதால், அதைத் தமக்குச் சாதமாக்கிக் கொள்கிறார்கள்.
ஆக இதொரு சுத்தமான ஏமாற்றாகும்.
இங்கே ஒரு கேள்வியை நாம் இலகுவாகவே எழுப்பிக் கொள்ளலாம். மாவீரர் நாளை நினைவு கொள்ளுதலைப் பற்றிய தீர்மானத்தை இந்தச் சபைகளில் எடுக்கவில்லை என்றால், அதை மக்கள் நினைவு கொள்ள மாட்டார்களா? அது அவர்களால் முடியாதா? மாவீரர் நாளைப் பற்றிய அறிவிப்பையும் அதை நடைமுறைப்படுத்தும் அறிவுறுத்தல்களையும் மேற்படி தவிசாளர்களும் முதல்வர்களும் விடுக்கவில்லை என்றால், தமிழ்ச்சமூகத்துக்கு மாவீரர் நாளைப் பற்றி எதுவுமே தெரியாதா? அதாவது மக்களால் மாவீரர் நாளை நினைவு கொள்ள முடியாதா? அப்படியென்றால், இங்கே என்ன நடக்கிறது? இது என்ன விளையாட்டு? இது என்ன மாதிரியான படங்காட்டல்!
மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற சிந்தனையின் வெளிப்பாடே இது. மட்டுமல்ல, மாவீர்ர்களின் தியாகத்தைக் கொள்ளையடிக்கின்ற – அதை வைத்துப் பிழைக்கின்ற கீழ்மை இதுவாகும்.
மக்களுக்கு எல்லாமே தெரியும். தங்களுடைய விடுதலைக்காக இன்னுயிரை இழந்தவர்களையும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பற்றித் தெளிவாகவே தெரியும்.
மக்கள் ஒன்றும் விவரமறியாக, வினையாற்ற முடியாத விரல் சூப்பிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அல்ல. இந்த மாதிரி வேலைகள், மக்களை மடையர்களாக்க் கருதிச் செயற்படும் மேலாதிக்கச் செயற்பாடுகள். மட்டுமல்ல, கோமாளித்தனங்களும் கூட.
உள்ளுராட்சி சபைகளின் பொறுப்பும் அதற்கு பிரதிநிதிகளைத் தேர்வு செய்திருப்பதும் குறித்த சபைகளின் மூலம் மக்களுக்கான பணிகளைச் சிறப்பாக – ஊழல் அற்ற – பாரபட்சமற்ற முறையில் செய்வதற்கே.
அதைச் செய்வதையே மாவீரர்களும், போராளிகளாகச் செயற்படும்போது விரும்பினார்கள். அதாவது மக்களுடைய நலனும் மேம்பாடுமே அவர்களுடைய முதற் கரிசனையாகவும் முதற் தெரிவாகவும் இருந்தது.
என்பதால், அதைச் செய்வதே மாவீரரின் கனவுகளுக்கு மதிப்பளிப்பதாகும். மாவீரர் நாளை நினைவு கொள்வதைச் சமூகம் செய்து கொள்ளும். சமூகத்தில் அதற்கெனப் பல்வேறு கட்டமைப்புகளும் மக்கள் அமைப்புகளும் உள்ளன. சபைகளின் வேலை அதுவல்ல. வேண்டுமானால் சபைகள் அதற்கு ஆதரவளிக்கலாம்.
இங்கே நிகழ்வது வேறு.
உள்ளுராட்சி சபைகள் இல்லையென்றால், மாவீரர் நாளை நினைவு கொள்வதற்கு எதுவுமே நிகழாது என்பது போன்ற தோற்றமே. அப்படியென்றால், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருக்காது விட்டால் என்ன நடந்திருக்கும்? மாவீரர் நாள் பணிக்குழுக்கள் என்று தெரிவு செய்யப்பட்ட அமைப்புகள் உள்ளனவே. அவை கூட இதில் கரிசனை காட்டாதா?
ஆகவே தயவு செய்து அவரவர் அவரவருக்கென மக்களால் வழங்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள். அதுவே மக்களுக்கும் மாவீரர்களுக்கும் செய்கின்ற மதிப்பார்ந்த அஞ்சலியாகும். மாவீர்ர்களின் கனவு மக்களின் முன்னேற்றமும் விடுதலையும் தேசத்தின் உயர்வுமே. அதைச் செய்வதற்கான வழிவகைகளை உருவாக்கி நிறைவேற்றுவதே உண்மையான மாவீரர் நினைவு கொள்ளலாகும்.
எளிய உதாரணம் ஒன்றைப் பொருத்தம் கருதி இங்கே சொல்லலாம். பல இடங்களில் மரணத்துக்குப் பிறகு தங்களுடைய உடலை தாங்கள் விரும்பும் இடத்தில் தகனம் செய்யுங்கள் அல்லது அடக்கம் செய்யுங்கள் என்று சொன்னதற்கு அமைய, இறந்தவரின் பிள்ளைகளும் உறவினர்களும் அப்படியே செய்கின்றனர். எதற்காக என்றால், அவருடைய இறுதி நேர ஆசை, வாழ்வின் விருப்பம் அது என்பதற்காக.
அப்படித்தான் மாவீரர்களும். அவர்கள் இதையும் விட உயர்வான முறையில் மண்ணும் (தேசமும்) மக்களும் (சமூகமும்) உயர்வடைய வேண்டும். சிறப்புற வேண்டும். விடுதலை மூச்சைச் சுவாசிக்க வேண்டும் என்று விரும்பினர். ஆகவே அதைச் செய்வது, அதை நிறைவேற்றுவதுதானே நம்முடைய கடமையும் பொறுப்புமாகும்.
என்பதால், இனியாவது மாவீரர்களின் பெயரையும் அவர்களுடைய தியாகங்களையும் அவர்களுடைய புகழையும் வைத்துப் பிழைப்புச் செய்யாமல், நியாயமாக நடந்து கொள்ள முயற்சியுங்கள்.
மக்கள் தமக்கான அரசியல் விடுதலையை – உரிமைகளைக் குறித்துச் சிந்திக்கிறார்கள். அதனைச் சரியாக முன்னெடுக்க்க்கூடிய தலைமைகள் எவை? தரப்புகள் எவை என்று பார்க்கிறார்கள். நிச்சயமாக அதைக் கண்டறிவார்கள். அதற்கான காலம் உருவாகி வருகிறது. அதுவரையிலும் இவ்வாறான குழப்பங்களும் குதர்க்கங்கமான செயற்பாடுகளும் இருக்கும் என்பது யதார்த்தம். ஆனால், அது நீடிக்காது.
00



