- கருணாகரன்
“புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன் முறையை பரந்தளவிலான பொதுக் கலந்துரையாடலுடன் தொடங்க வேண்டும். சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிப்பதாக அரசியலமைப்பு அமைய வேண்டும்.
”13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதையும் தாண்டிச் செல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வு ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செயவதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல.
”அதிகாரப் பரவலாக்கத்தை பிரிவினைவாத நோக்கம் கொண்டதாக சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம் மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும்.
இலங்கையில் அமைதியும் பரஸ்பர மதிப்புடன் சமூகங்கள் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பி.யின் முன்னாள் செயலாளரான லயனல் போபகே.
லயனல் போபகேயின் கருத்தை இன்றைய ஜே.வி.பியினர் அல்லது ஆட்சியிலிருக்கும் NPP எந்தளவுக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை. ஆனால் லயனல் போபகே சொல்லியிருப்பது நிராகரிக்க முடியாதது. பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.
இலங்கையின் யதார்த்தத்தின்படி அதிகாரத்தைப் பகிரத் தயங்கும்வரைக்கும் – மாற்றங்களை உருவாக்கும் வரைக்கும் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் இருந்தே தீரும். நெருக்கடிகளும் பிரச்சினைகளும் இருக்கும் வரையில் நாட்டில் பிளவும் பின்னடைவும் நீடிக்கும். இதனை ஆட்சியாளர்களை மாற்றுவதன் மூலம் தீர்க்கவோ சமன் செய்யவோ முடியாது.
காரணம், இலங்கை பல்லினச் சமூகங்களின் நாடு. பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற நாட்டில் பன்மைத்துவமும் சம நிலையும் பேணப்பட வேண்டும். இதுதான் உலகளாவிய நிலைப்பாடும் அனுபவமுமாகும். என்பதால்தான் “இலங்கையில் அமைதியும் பரஸ்பர மதிப்புடன் சமூகங்கள் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்” என்று அழுத்தமாகச் சொல்கிறார் போபகே.
பல்லினச் சமூகங்களின் நாடொன்றில் ஒரு இனத்தினருக்கு மட்டும் அதிகார வலுவும் முன்னுரிமைகளும் வழங்கப்படவே கூடாது. அப்படி வழங்கப்பட்டதன் விளைவையே நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதாவது அந்தத் தவறின் விளைவுகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
இந்தத் தவறு உள்வீட்டுப் பிரச்சினை என்று சிங்கள அதிகாரத் தரப்பினால் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், 1980 களின் தொடக்கத்திலிருந்தே இது உள்வீட்டுப் பிரச்சினை இல்லை என்று பிராந்திய சக்தியாகிய இந்தியாவும் 1990 க்குப் பின்னர் சர்வதேச சமூகமும் தலையீட்டைச் செய்யத் தொடங்கின. இலங்கை – இந்திய உடன்படிக்கையும் நோர்வேயின் மத்தியத்துவத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுகளும் மனித உரிமைப்பேரவையின் அறிக்கைகளும் ஐ.நா தீர்மானங்களும் இதை நிரூபிக்கின்றன.
இப்பொழுது பல வகையிலும் வெளியாரின் தலையீடுகள் அதிகமாகியிருக்கிற அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. அதாவது இலங்கையின் சுயாதீனத்துக்கு (இறைமைக்கு) நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதிலே துயரமான வேடிக்கை என்னவென்றால், உள்நாட்டில் ஏனைய சமூகங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து நாட்டை முன்னேற்றி, மகிழ்ந்து வாழ முடியாத சிங்களத் தரப்பு, வெளியாரிடம் மண்டியிடுகிறது. இருந்தும் அதைப்பற்றி அது வெட்கப்படவே இல்லை.
வெளியாரிடம் சரணடைந்தாலும் பரவாயில்லை. தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களை அங்கீகரிக்க மாட்டோம், அவர்களைச் சமத்துவமாகக் கொள்ள மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கின்றது. இந்த அறிவீனத்தை – முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது?
மட்டுமல்ல, சிங்களர் அல்லாத சமூகங்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டோம். அவர்களைச் சமமாக நடத்த முடியாது என்ற சிங்கள முதன்மைவாதக் கட்சிகளான ஐ.தே.க, சு.க, பெரமுன போன்றவை குப்பைப் கூடைக்குள் சென்று விட்டன. அவற்றினால் கட்சியையும் காப்பாற்ற முடியவில்லை. நாட்டையும் காப்பற்ற முடியவில்லை. அந்நிய சக்திகளிடம் நாட்டைத் தார வார்க்கவே முடிந்தது. அவற்றின் தலைவர்களை வரலாறு இழித்தே உரைக்கிறது.
என்பதால்தான், அதிகாரப் பகிர்வு என்பது ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செயவதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தை பிரிவினைவாத நோக்கம் கொண்டதாக சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம் மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும்“ என்று போபகே விளக்க வேண்டியேற்பட்டது.
திரு. போபகே ஒரு அரசியல் மருத்துவராக இங்கே தொழிற்படுகிறார் (Mr. Popake works here as a political doctor).
அரசியல் என்பது பட்டறிவையும் புத்தாக்கச் சிந்தனையையும் மக்கள் நலனையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதுவே சரியானது. நேர்மையானது என்பதற்கு லயனல் போபகேயின் இந்த வார்த்தைகளும் இந்த நிலைப்பாடும் சான்று.
தன்னுடைய அறிவை போபகே சரியான முறையில் பகிர்ந்து கொள்கிறார். போபகேவைப் போல வேறு சில சிங்களப் புத்திஜீவிகளும் எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் கலைஞர்களும் உள்ளனர். அந்த அணி சிறியதுதான். ஆனால், அது வலிய சிந்தனையைக் கொண்டது.
லயனல் போபகேயை இன்றைய ஜே.வி.பியினர் அல்லது NPP எப்படிப் பார்க்கிறது என்ற கேள்வி உண்டு. பொதுவாகவே பிரிந்து சென்றவர்களை ”விலகிச் சென்ற மந்தைகள்” என்று பார்க்கின்ற மனோ நிலைதான் பெரும்பாலான அரசியல் கட்சிகளிலும் அரசியல் இயக்கங்களிலும் இருப்பதுண்டு. பிரிந்து செல்வோர் மாற்றுச் சிந்தனையினால் தங்களை விசாலித்துக் கொண்டவர்கள், புத்தாக்கச் சிந்தனைக்குரியவர்கள், சுயாதீனமானவர்கள், புதிய யதார்த்தங்களை உருவாக்குவதைப் பற்றிச் சிந்திப்பவர்கள், வளர்ச்சிக்குரியவர்கள் என்றெல்லாம் பார்க்கின்ற தன்மை குறைவு.
தமிழ் அரசியற் பரப்பில் இது கிடையவே கிடையாது. பிரிந்து சென்றால் அல்லது விலகினால் அவர் தீண்டப்படாதவர், துரோகி, எதிராளி என்றே நோக்கப்படுகிறார்.
ஆனால், முற்போக்கான (இங்கே தனியே இடதுசாரிய அரசியலை மட்டும் இந்தச் சொல் குறிக்கவில்லை) எந்த அரசியற் சக்தியும் (இயக்கம் அல்லது கட்சி) தன்னை வளர்த்துக் கொள்ளவும் புதிய அரசியலை முன்னெடுக்கவும் இத்தகைய புத்தாக்குநர்களைத் தேரும். மதிப்போடு அரவணைக்கும். நல் விளைவுகளை உண்டாக்க வேண்டுமென்றால், நல்லனவற்றையும் நல்லவற்றைக் கொண்டிருப்போரையும் அரவணைத்துக் கொள்வது சிறப்பாகும்; அவசியமாகும்; தேவையாகும்.
லயனல் போபகேயை NPP எந்தளவுக்கு உள்ளீர்த்துக் கொள்ளப்போகிறது? அவருடைய சிந்தனைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும் என்பதைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இதைக் கட்சி விவகாரமாகப் பார்க்காமல், தேசிய விடயமொன்றுக்கான பரிந்துரைகளை வழங்கும் ஒரு அனுபவஸ்தர், முன்னோடி, பங்களிப்பாளர் என்று நோக்கினால், அதனுடைய பயனை NPP யும் அடையும். நாடும் பெற்றுக் கொள்ளும்.
போபகே, ஜே.வி.பியுடன் ஒவ்வாமை ஏற்பட்டுத்தான் அதிலிருந்து வெளியேறிச் சென்றார். வெளியேறிய பிறகு போபகேக்குள் ஏற்பட்ட மறுமலர்ச்சி மிகப் பெரியது. அது முன்னுதாரணம் கொள்ளக் கூடியது.
போபகே, இன்று ஒரு முன்னாள் ஜே.வி.பி ஆளாகச் சிந்திக்கவில்லை. பதிலாக இலங்கையராகச் சிந்திக்கிறார். இலங்கையாராகச் சிந்திப்பதால்தான் மேற்சொன்னவாறு அவரால் துணிந்து கருத்துகளைச் சொல்ல முடிகிறது. மட்டுமல்ல, அது தன்னுடைய கடப்பாடும் என்று கருதுகிறார். இது மாண்புக்குரியதாகும்.
இவ்வளவுக்கும் போபகே இப்போதிருப்பது இலங்கைக்கு வெளியே – அவுஸ்திரேலியாவில். புலம்பெயர்வு. போபகேக்குள் உருவாக்கிய பார்வை, சர்வதேசப் பெறுமானமுடையது. என்பதால்தான் நாம் போபகேயைக்குறித்தும் அவர் தற்போது கூறுவதைப்பற்றியும் பேசுகிறோம்.
ஈழப்போராட்டத்திலும் இவ்வாறு புதிய பார்வையைக் கொண்டவர்கள், அனுபவங்களினடியாகச் சிந்திப்போர் உள்ளனர். ஆனால், அதை தமிழ் அரசியற் தரப்புகள் பொருட்படுத்திக் கொள்வதில்லை. காரணம், அவற்றிடம் புத்தாக்கச் சிந்தனையோ, புதினவற்றைக் குறித்த விருப்போ, யதார்த்தத்தைக் குறித்த புரிதலோ, பாதிக்கப்பட்ட மக்களைக் குறித்த கரிசனையோ, தமிழ் அரசியல் அடைய வேண்டிய பெறுமானங்களைக் குறித்த விருப்போ இல்லை. இவை இருந்தால்தானே அதற்கான வழிகளும் வழிகளைக் காட்டுவோரும் தேடப்படுவார்கள்.
ஆக இரண்டு தரப்பிலும் நல்லனவற்றைக் கவனிப்போர் குறைவு. மக்களின் நிலைமையும் அப்படித்தான். நல்லனவற்றை ஆதரிப்பதில்லை. ஊடகங்களின் நிலையும் அவ்வாறுதான் உள்ளது. சரியான நிலைப்பாடுகளுக்கு, நீதியான கருத்துகளுக்கு முன்னுரிமையை – முதன்மைப்பாட்டை – அளிப்பதில்லை. பதிலாக பாரம்பரியமான இனவாதத்தை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக உள்ளன.
இப்பொழுது ஆட்சியிலிருக்கும் NPP அரசாங்கம் மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கிறது. அந்த மாற்றங்கள் எந்த வகையானவை? எப்படியானவை? எந்த அளவுக்கானவை? என்பது கேள்விதான்.
ஆனால், முந்திய ஆட்சித் தரப்புகளை விட முற்போக்கானது என்பதை மறுக்க முடியாது.
ஆகவே, இந்த ஆட்சித் தரப்புடன் இணைந்து அல்லது அதற்கு ஆதரவளித்து அல்லது அதோடு தொடர்பு கொண்டு (உறவாடி) பேசி (nigotion) மாற்றங்களை – திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
எப்போதும் எல்லாவற்றையும் எதிர்ப்பதையே குணமாகக் கொள்வதால் நன்மைகள் எதுவும் விளையாது. தீமைகளே நேரும். அதொரு பலவீனமாகி விடும்.
இங்கே ஒன்றை நாம் ஆழமாகக் கவனிக்க வேண்டும். NPP அரசாங்கத்தை JVP யாக இந்தியாவோ அமெரிக்காவோ அல்லது (ஐ.எம். எவ் உள்ளிட்ட) சர்வதேச சமூகமோ பார்க்கவில்லை. அதற்காக இவற்றுக்கெல்லாம் NPP யின் பின்னணி தெரியாது என்றில்லை. வெளித்தரப்புகளைப் பொறுத்தவரையில் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ, அவர்களைக் கையாள்வதே இலக்கு. அதைச் செய்கிறார்கள். அதுதான் அவர்களுக்கு – அவர்களுடைய நலனுக்கும் தேவை. முரண்படுவதால் அவர்களுக்கு இழப்புகளே ஏற்படும்.
அரசியல் உறவுகள் இப்படித்தான் இருக்கும். இராஜதந்திர அடிப்படையில்.
ஆனால், இங்கே தமிழ் பேசும் சமூகங்களோ கதவுகளை இறுகச் சாத்தி விட்டு, வெளியே Protest poster ஐ ஒட்டி விட்டுக் காத்திருக்கிறோம். இத்தகைய வழிமுறையினால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. ஒரு நெல்லிக்காயைக் கூடப் பெற முடியாது.
எனவே இவ்வாறான விடயங்களை ஓரங்களில், சிறிய அளவில், தனிப்பட்டதாக குறுக்கி விடாமல், மையத்திற் கொண்டு, பெருங்கவனங்களைக் குவிக்க வேண்டும் (We need to concentrate our energies at the center.).
நாட்டை மீட்பது என்பது மக்களைப் பாதுகாப்பதாகும். மக்களின் கனவுகளையும் நம்பிக்கைகளையும் விருப்பத்தையும் நிறைவேற்றுவதாகும். மக்களின் கனவுகளும் நம்பிக்கைகளும் விருப்பமும் (எதிர்பார்ப்பும்) அவர்களுடைய தேவைகளின் பாற்பட்டதே. அதை நிறைவேற்றுவதே அரசியற்பணியாகும்.
00



