NPP யின் முதல் அரையாண்டு

Date:

– கருணாகரன்-

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமர்ந்து முதல் அரையாண்டு முடிந்து விட்டது. இந்த அரையாண்டின் நிகழ்ச்சிகளும் நிலவரங்களும் சொல்வதென்ன?

1. ஊழல்வாதிகளாகச் சொல்லப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பொலிஸ்மா அதிபர், சிறைச்சாலை ஆணையர் முதல் முன்னாள் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், நிர்வாக உயர் மட்ட அதிகாரிகள் வரையில் அடக்கம். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட பெருந்தலைகளான ராஜபக்ஸவின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் – ஊழல்வாதிகள் – இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றொரு அபிப்பிராயம் பொது மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. எடுத்த எடுப்பில் ராஜபக்ஸ போன்ற பெருந்தலைகளில் கைவைத்தால், அவர்களுக்கு ஆதரவாக அடுத்த மட்டத்தில் உள்ளவர்கள் ஆதரவாளர்களைத் திரட்டி வீதியில் இறங்கி அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடும் என்பதால், அதற்கு வாய்ப்பளிக்காத வகையில் முன்னேற்பாடாக, அடுத்த கட்டத்தலைவர்களை உள்ளுக்குள் தள்ளி வேர்களை வெட்டி விடும் உபாயத்தை NPP கைக்கொள்கிறது என்று கருதப்படுகிறது. இதைச் சற்றுப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

2. பொருட்களின் விலைக்குறைப்பு, மின்சாரக் கட்டணத்தில் ஏற்ற – இறக்கம், எரிபொருள் விலை ஏற்ற – இறக்கம், தட்டுப்பாட்டை நீக்குதல், விவசாயிகளுக்கான உத்தரவாதம் போன்றவற்றில் ஒரு நிலையில்லாத் தன்மை காணப்படுகிறது. தொடக்கத்தில் விலைக்குறைப்பு, கட்டணக்குறைப்பு போன்றவற்றைச் செய்து சனங்களை மகிழ்வூட்டியிருந்தாலும் பின்னர் எல்லாம் வழமைக்குத் திரும்பின மாதிரி (வேதாளம் முருங்கையில் ஏறிய கதையாக) எல்லாமே பழைய இடத்துக்கு வந்துள்ளது. இதனால், மக்கள் எதிர்பார்த்த பொருளாதாரச் சுமையிலிருந்து நீங்கியதாக உணர முடியவில்லை. ஆனாலும் IMF வும் உலக வங்கியும் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம் – திருப்தி காணப்படுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இது யாரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கை? என்று விசயமறிந்தவர்கள் கேட்கிறார்கள். காரணம், J.V.P யும் சரி, NPP யும் சரி தொடக்கத்தில் ஐ.எம்.எவ், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த உண்மை. NPP அதிகாரத்துக்கு வந்தபின் கடைப்பிடிக்கும் நெகிழ்ச்சிப்போக்கில் ஐ.எம்.எவ், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றோடு மட்டுமல்ல, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிச் சக்திகளோடும் புதிய உறவுக்குச் சென்றிருப்பதையும் அறிவோம். இது ஆட்சியில் இருக்கும்போது தவிர்க்க முடியாத அணுகுமுறை – கடைப்பிடித்தே ஆக வேண்டிய விதிமுறை என்பதையும் புரிந்து கொள்கிறோம். ஆனால், இவற்றின் ஊடாக மக்களுக்கு எத்தகைய நன்மைகள், முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன? ஏற்பட்டுள்ளன என்பதே இங்கே கேள்வியாகும். என்பதால்தான் இதனால் யாருக்கு நன்மை? யாரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கை? யாருக்கான வார்த்தைகள்? என்று கேட்க வேண்டியுள்ளது.

3. NPP அதிகாரத்துக்கு வரும்போது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவற்றில் ஒன்று பயங்கரவாதத் தடைச்சட்டம் PTA நீக்கப்படும் என்பதாகும். ஒரு காலத்தில் இன்றைய NPP யினர் அல்லது NPP க்குள் இருக்கும் முந்திய JVP யினர் PTA யினால் பாதிக்கப்பட்டவர்கள். மட்டுமல்ல, நாட்டில் புதிய முறையிலான ஆட்சியை மலரச் செய்வோம் என்ற பிரகடனத்துக்கு அமைய நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய விடயங்களை NPP நிச்சயமாக அகற்றும் – அப்புறப்படுத்தும் – என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் ஒன்றுதான் PTA. ஆனால், அதைச் செய்வதற்குப் பின் நிற்கிறது NPP. அப்படியென்றால், ஏனைய ஆட்சியாளர்களைப்போல பயங்கரவாதத் தடைச்சட்டத்தை வைத்திருந்தால்தான் தன்னுடைய ஆட்சிக்குப் பாதுகாப்பு என்று NPP யும் நம்புகிறதா? இது மக்களை நம்புவதற்குப் பதிலாக அதிகாரத்தை – அதற்கான சட்டத்தை – அதிகமாக நம்பும் அதிகார மனநிலையின் வெளிப்பாடன்றி, வேறெதுவாக இருக்க முடியும்? என்பதால் NPP மீதான நம்பிக்கையில் ஜனநாயகவாதிகளுக்கு நம்பிக்கையீனம் – நம்பிக்கைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

4. NPP ஒரு மாற்றுச் சக்தி என்ற எண்ணத்தில்தான் தமிழ் பேசும் மக்களும் அதற்கு வாக்களித்தனர். முந்திய JVP யைப் பற்றிய அபிப்பிராயத்தைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் அந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் எந்த அளவுக்கு NPP நிறைவேற்றியிருக்கிறது? குறைந்த பட்சமாக நம்பிக்கை அளிக்கக்கூடிய ஆரம்பகட்ட நடவடிக்கைகளையேனும் அது செய்துள்ளதா? என்றால் இல்லை என்றே துணிந்து கூற முடியும். மாறாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நியமிக்கப்பட்டுள்ளார். இது மேலும் முரணான விடயமாகவே நோக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பற்றியோ, அங்குள்ள பிரச்சினைகளைப் பற்றியோ தெரியாத ஒருவரை – வெளியாளை – பொறுப்பான பதவியில் நியமித்திருப்பது அந்த மக்களை அவமதிக்கும் அதிகாரச் செயலாகும். சுனில் ஹந்துன்னெத்திக்குப் பதிலாக கிழக்கு மாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வேறொரு மக்கள் பிரதிநிதியை ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக நியமித்திருக்க வேண்டும். அது சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது மட்டுமல்ல, அரசாங்கத்தின் மீதான தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையையும் பலப்படுத்தியிருக்கும். இதைக்குறித்துக்கூட அரசாங்கம் சிந்திக்கவில்லை.

5. ஆனையிறவு உப்புக்கு ‘ரஜ லுணு’ என்ற பெயரை வைத்ததால் அரசாங்கத்துக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்பட்டது. இருந்தும் உப்பின் சுவை முக்கியமா, அதனுடைய பெயர் முக்கியமா? என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார். ஆனாலும் அவர் தன்னுடைய முடிவை மாற்ற வேண்டியிருந்தது. இதனால் அதிலிருந்து விடுபட்டு அல்லது பின்வாங்கி, ‘ஆனையிறவு உப்பு’ என்றே பெயரிட வேண்டியதாயிற்று. ஆனாலும் இது வரவேற்கப்பட வேண்டியது.

6. மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மேய்ச்சற்தரை மற்றும் தையிட்டி விஹாரை போன்ற போன்றவற்றில் NPP அரசாங்கம் மாற்று நிலைப்பாட்டை எடுக்கும் என்று தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதை NPP செய்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் NPP தவிர்க்கிறது; தப்பிக் கொள்ள முயற்சிக்கிறது. இதேவேளை செம்மணியில் அகழப்பட்டுவரும் மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. புதைகுழி அகழ்வுக்கும் ஆய்வுக்குமாக முதற்கட்டமாக ஒரு தொகை நிதியையும் NPP அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. விசாரணைகளுக்கும் முழுமையான ஆதரவளிக்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்க வழிசெய்யப்படும் என்றும் அது கூறியிருக்கிறது. இதில் நாம் ஒன்றைக் கவனிக்க முடியும். அல்லது புரிந்து கொள்ள முடியும். தனக்கு நெருக்கடி ஏற்படாத விடயத்தில் அது ஒத்துழைக்கவும் ஆதரவளிக்கவும் தயாராக இருக்கிறது என்பதே அதுவாகும். மயிலத்தமடு, தையிட்டி போன்றவை படைத்தரப்புகள், சிங்கள பௌத்தத் தரப்புகளோடு தொடர்புபட்டவை. செம்மணி அப்படியல்ல. அது முந்திய ஆட்சியாளர்களோடு தொடர்புடையது. ஆகவே இதற்கேற்ற மாதிரியே அது செயற்பட முனைகிறது.

7. சிங்களப் பொதுமக்களின் எதிர்பார்ப்பு நாட்டில் பொருளாதார நெருக்கடி தணிய வேண்டும் என்பதும் பிரச்சினைகளற்ற ஆட்சியொன்று உருவாக வேண்டும் என்பதே. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் இன்னமும் NPP வெற்றியைக் காணவில்லை. இந்த அரையாண்டுகளில் அரசாங்கம் செலவீனக் குறைப்பைச் செய்துள்ளது. அல்லது அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது எனலாம். குறிப்பாக அதிகரித்த சலுகைகளைக்குறைத்துள்ளது. முதன்மையாக அரசாங்கமே தன்னை எளிமைப்படுத்தியுள்ளது. இது வரவேற்க வேண்டிய முன்னுதாரணமான நடவடிக்கையே! இதை ஒரு ஆட்சி மரபாக்க வேண்டும். அதில்தான் முழுமையான வெற்றி தங்கியுள்ளது. ஆனால், ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது காந்தி உருவாக்கிய எளிமையும் சுதேசத் தன்மையும் இன்று எப்படித் தலைகீழ் மாற்றத்துக்குள்ளாகி உள்ளது என்பதை. அன்றைய காந்தி எளிமையின் உதாரணம். இன்றைய மோடி ஆடம்பரத்தின் அடையாளம். மோடி அணியும் ஆடைகளின் தொகையும் வகையும் அவற்றின் பெறுமானமும் மலைக்க வைப்பது. ஆகவே, என்னதான் ஆட்சியாளர்கள் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் அதைத் தொடர வைப்பதில் மக்களுக்குத்தான் அதிக பொறுப்புண்டு. மக்கள் எளிமைக்கு எதிரான – நேர்மைக்கு எதிரான சக்திகளைத் தேர்ந்தெடுத்தால், கட்டமைக்கபட்ட – நிலை நிலைநிறுத்தப்பட்ட எளிமையும் நேர்மையும் சிதைந்து போகும்.

8. அரசியல் தீர்வுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள், சிறுபான்மைத் தேசிய இனங்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் NPP யின் தடுமாற்றங்களும் தயக்கங்களும் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது, 13 திருத்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்துவது, வடக்குக் கிழக்கில் படைக்குறைப்பைச் செய்வது, பௌத்த விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவது, சிங்கள மேலாதிக்கத்தை இல்லாதொழிப்பது, ஜனநாயகத்தை மேம்படுத்துவது போன்றவற்றில் இன்னமும் நம்பிக்கையளிக்கக்கூடிய சமிக்ஞைகள் காணப்படவில்லை. ஆனாலும் நம்பிக்கையோடுதான் மக்கள் இன்னமும் உள்ளனர். இந்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டியது NPP யின் பொறுப்பாகும். ஆனால், அதைச் சிதைக்கும் வகையிலேயே NPPயின் தமிழ்ப் பிரதிநிதிகள் உள்ளனர். குறிப்பாக வடக்கில் அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான அணி (இளங்குமரன்) ஒன்றே போதும். நம்பிக்கையையும் நல்லபிப்பிராயத்தையும் சிதைக்கும் ஆயிரம் வெடிகுண்டுக்கு இவர்கள் நிகராக உள்ளனர். இவர்கள் எதையும் செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை. தங்களுடைய வாயைச் சும்மா வைத்திருந்தாலே போதும் என்ற நிலைதான் காணப்படுகிறது. உண்மையில் NPP தனக்குத் தமிழ் பேசும் சமூகங்களிடம் கிடைத்த ஆதரவுக்கும் வரவேற்புக்கும் ஏற்ப நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் சாத்தியமான விடயங்களைச் செய்திருக்க வேண்டும். அவற்றை ஆரம்பித்திருக்க வேண்டும். குறிப்பாக ரணில் அரசாங்கம் கொண்டு வந்த காணிகளை மக்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை இடைநிறுத்தாமல் தொடர்ந்திருக்கலாம். காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கலாம். அரசியற் கைதிகளின் விடுதலையைக் குறித்துச் சாதகமான முறையில் ஆராய்ந்திருக்கலாம். தேர்தல் காலங்களில் கிராமங்களுக்குப் பயணத்த வேகத்தில் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் மக்களைச் சந்தித்து, அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்திருக்கலாம். பின்னர் அவற்றுக்குச் சாத்தியமான முறையில் திட்டங்களை உருவாக்கக்கூடியதாக இருந்திருக்கும். மட்டுமல்ல, வரவு செலவுத்திட்டத்திலும் பொருத்தமான – தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கவும் முடியும். இந்த அரையாண்டில் குறைந்த பட்சமாகப் பரீட்சார்த்தமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இதைச் செய்திருக்கலாம்.

9. நம்பிக்கை தரக்கூடிய பிரதிநிதிகளை மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. புதிய ஆட்சி, புதிய தரப்பின் ஆட்சி என்பதை மக்கள் உணர முடியவில்லை. முந்திய ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் இடையில் என்ன வேறுபாடு என்று யாரிடத்திலும் கேட்டால், அதற்குச் சரியான பதிலைச் சொல்லவே முடியாது. தமிழர்களிடத்திலும் சரி, முஸ்லிம்களிடத்திலும் சரி, சிங்கள மக்களிடத்திலும் சரி இந்தக் கேள்விக்கு ஆழமாக யோசிக்க முடியுமே தவிர, சட்டெனப் பதிலைச் சொல்ல முடியாது. இருக்கின்ற ஒரே பிரச்சினை NPP யை விட்டால், வேறு யார்? ஒன்றில் சஜித். அல்லது ரணில். அல்லது மைத்திரி. அல்லது ராஜபக்ஸவினர் என்ற நிலைமையே உள்ளது. இவர்களை விட NPP பரவாயில்லை என்ற அளவில்தான் மக்கள் உள்ளனர். நிலைமையும் அப்படித்தான் உள்ளது. அதனால் NPP தப்பிப் பிழைக்கிறது.

உண்மையில் மாற்றமொன்றை உருவாக்கக் கூடிய அளவுக்கு – மக்களுடைய எதிர்பார்ப்புக்கும் தேவைக்கும் அமைய புதிய ஆட்சி ஒன்றை NPP வழங்க வேண்டுமானால், முதலில் அது தடுமாற்றங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இனவாதத்தைப் பாதுகாக்க முற்படக் கூடாது. இனவாதத்தைப் பாதுகாக்க முற்பட்ட தரப்புகள் தாமும் தோற்று நாட்டையும் தோற்கடித்த கசப்பான வரலாற்றைப் பற்றி NPP நன்கு அறியும். ஆகவே இந்தக் கசப்பான

வரலாற்றை NPP யும் தொடரக் கூடாது. அது மக்களுடைய எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் இழைக்கின்ற மாபெரும் அநீதியாகும். மக்கள் நலன்களை – நன்மைகளை எதிர்பார்த்தே வாக்களிக்கிறார்கள். ஆட்சியாளர்களைத் தெரிவு செய்கிறார்கள். அதிகாரத்தைக் கையளிக்கிறார்கள். ஆட்சியாளர்களோ, அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் மக்களுக்கு மாறாகவே செயற்பட விளைகிறார்கள். இந்த மர்மச் சூத்திரம் என்ன?

NPP யின் அரை ஆண்டு அடையாளம், அடுத்து வரவுள்ள நான்கரை ஆண்டுகளை மதிப்பிடுவதற்கு உதவுகிறது. ஆகவே நாட்டில் எதிர்பார்க்கக்கூடிய மாற்றங்கள் என்பது ஒரு மாயக் கனவுதான்.

00

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்