♦கருணாகரன்
இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு வந்திருக்கிறார். இது மோடியின் நான்காவது இலங்கைப் பயணம். இந்தப் பயணத்தின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பாதுகாப்பு விடயங்கள், இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான வர்த்தக உடன்படிக்கைகள், இந்தியா மேற்கொள்கின்ற உதவித்திட்டங்கள் மற்றும் இருதரப்பு நலன்சார் மேம்பாட்டுக்கான விடயங்கள், இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் எனப் பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன. சிலவற்றுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சில திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இன்னொரு பக்கத்தில் தமிழ், மலையக அரசியற் தரப்பினரையும் மோடி சம்பிரதாயமாகச் சந்தித்திருக்கிறார். முஸ்லிம் தரப்புப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அல்லது கண்டு கொள்ளப்படவில்லை. இது முஸ்லிம் தரப்புக்கு ஏற்பட்டுள்ள சிறிய நெருக்கடியாகும். அதாவது முஸ்லிம்கள் முக்கியமான தரப்பினராக இல்லை என இந்தியா கருதுவதாகவும் அதை ஒரு ஆதாரமாகக் கொண்டு இலங்கை அரசும் ஏனைய சிங்களத் தரப்பினரும் மேலும் முஸ்லிம்களை ஒதுக்க முயற்சிக்கலாம். மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இப்படி மோடியின் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு விடயங்கள், பல தரப்பினருடனான சந்திப்புகள் எல்லாம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பயணத்தை தென்னாசியப் பிராந்திய அரசியல், அதனுடைய பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த நடவடிக்கை என்றே வரையறை செய்ய வேண்டும்.
மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்பு – ஜனாதிபதியாகப் பதவியேற்ற கையோடு திரு அநுர குமாரதிசநாயக்க, நான்கு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவுக்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்கே அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதும் இருதரப்பு உறவுகளைக் குறித்தும் இருதரப்பு பாதுகாப்பு – பொருளாதார விடயங்களைக் குறித்தும் பேசப்பட்டது. அதனுடைய தொடர்ச்சியே மோடியின் இந்தப் பயணம் என்றும் எடுத்துக் கொள்ள முடியும்.
ஆகவே ஒரு தொடர் நடவடிக்கையின்பாற்பட்ட விடயங்கள் இவையாகும்.
இன்னும் இதைச் சற்று ஆழமாகப் பார்த்தால் மோடியின் நான்காவது வருகை இது என்பதால் மோடி அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கையின் வளர்ச்சிக்கட்ட – அடுத்த கட்டச் செயற்பாடுகளே இப்போது நிகழ்பவை என்று கருத முடியும். இது மேலும் தொடரக் கூடும். அதற்கான வாய்ப்புகளே அதிகமாக உண்டு.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் தீர்க்கப்படாமலே நீடிக்கும் இனப்பிரச்சினையும் இந்தியாவை (புதுடெல்லியை) தன்னோடு நெருக்கமாக வைத்திருக்கும் இலங்கையின் உபாயமாகும். இதற்காக அது சில சலுகைகளையும் விட்டுக் கொடுப்புகளையும் செய்யும். சில இடங்களில் சமரசங்களையும். அதற்கு நல்ல உதாரணம், இப்போது அதிகமாக விமர்சிக்கப்படும் ஜே.வி.பி – இந்திய உறவாகும். இப்பொழுது ஆட்சியிலிருக்கும் NPP யின் மையச் சக்தியான JVP இந்திய எதிர்ப்புவாதத்தை நீண்டகாலமாகவே முதன்மைப்படுத்தி வந்தது. JVP யின் இந்திய எதிர்ப்பு வாதம் சாதாரணமானதல்ல. இந்தியப் பொருட்களையே பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் கொலைதான் என்ற அளவுக்கு வெறித்தனமானது. மட்டுமல்ல, மலையக மக்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் நேரடிப் பிரதிநிதிகள் என்றும் அது வாதிட்டது.
இப்போது இவையெல்லாம் அப்படியே கைவிடப்பட்டு, ஒரேயடியாகக் குத்துக் கரணம் அடித்ததைப்போல இந்தியாவோடு – மோடியோடு – NPP யும் ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்க தலைமையிலான JVP யினரும் கூடிக் குலவுகின்றனர். இந்தக் கட்டிப் பிடி வைத்தியத்துக்கு ஆதாரமாக இலங்கையின் மிக உயர் விருதான “மித்ர விபூஷண” விருதை மோடிக்கு அளித்திருக்கிறார் அநுரகுமார திசநாயக்க.
இந்த அரசியற் காட்சி மாற்றம் – JVP யின் நிலைப்பாட்டு மாற்றம் – இலங்கையின் இராசதந்திரச் செயற்பாடுகளின் தொடர்ச்சி எனலாம். அதைப்போல நிலைமைகளைப் புரிந்து கொண்டு அரசியலை முன்னெடுப்பதற்கு இன்றைய JVP விளைகிறது. அதனுடைய அடையாளமாகவே NPP யும் அது முன்னெடுக்கும் பிராந்திய, சர்வதேச உறவுகளுமாகும். குறிப்பாக இந்தியாவுடனான உறவும் IMF உடனான பயணமுமாகும். இலங்கையின் இராசதந்திரத்தின் முக்கியமான ஒரு அம்சம், அதனுடைய நெகிழ்ச்சியாகும். இந்த நெகிழ்ச்சி, தன்னை நெருக்கடிகளிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கும் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்குமான உபாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், மோடியின் வருகையையொட்டி இலங்கையின் எதிர்க்கட்சிகள் சில NPP அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாகப் பேசிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக முன்னிலை சோசலிஸக் கட்சி. மோடியுடன் ஏதாவது வகையில் பாதுகாப்பு உடன்படிக்கையை அநுர குமாரதிசநாயக்கவின் அரசாங்கம் செய்யுமாக இருந்தால், தாம் மக்களைத் திரட்டி வீதியில் இறங்குவோம் என்று எச்சரித்துள்ளது முன்னிலை சோசலிஸக் கட்சி. இதைக் கண்டு அநுர அரசாங்கம் பயப்படப்போவதில்லை. ஏனென்றால், ஒரு காலத்தில் இதேபோலத் தெருவில் பல பிரகடனங்களோடு மக்களை இறக்கியதே JVP. எனவே இந்தச் சரசரப்புக்கெல்லாம் அநுர (JVP) என்ற பனங்காட்டு நரி பயப்படப்போவதில்லை.
இதேவேளை முன்னிலை சோசலிஸக் கட்சியின் இந்த எதிர்ப்பை இந்திய எதிர்ப்பு வாதத்தின் தொடர்ச்சி என்று பார்ப்பதா? அல்லது அரசியல் நிலவரத்தைப் பற்றிய மதிப்பீடோ, வரலாற்றைப் பற்றிய கற்கையோ இல்லாத வெறும் பேச்சு என்று எடுத்துக் கொள்வதா? என்று தெரியவில்லை. அல்லது எதையாவது செய்ய வேண்டும் என்ற தத்தளிப்பின் வெளிப்பாடா இது?
ஏனென்றால், முன்னிலை சோசலிஸக் கட்சி எப்போதாவது ஆட்சியிலிருந்தாலும் இந்தியாவுடன் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால் இது பிராந்திய ரீதியான ஒரு விடயமாகும்; ஒரு பிரச்சினையாகும். அதாவது இது பூகோள அரசியலின் நிரலாகும் (Program of geopolitics).
இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவைப் புறமொதுக்கி விட்டு இலங்கை தனித்துச் செயற்பட முடியாது என்பதை எல்லோரும் அறிவர். அதிகாரத்துக்கு வெளியே நிற்கும்போது எவரும் எதையும் பேசலாம். எப்படியும் பேசலாம் என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டியது. ஒரு காலம் இந்திய எதிர்ப்பு வாத்த்தை இன்றைய ஆட்சியாளர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள் அதிகாரத்துக்கு வெளியே இருந்தார்கள். இப்போது அதிகாரத்தில் இருப்பதால் இந்தியாவை வரவேற்கிறார்கள். அப்படி வரவேற்க வேண்டியுள்ளது. இதுதான் யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையிலான வேறுபாடும் உண்மையுமாகும்.
ஏறக்குறைய இதே நிலைப்பாட்டுடன்தானிருந்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும். ஈழத்தமிழரின் உரிமைக்கான போராட்டத்தை இலங்கை நசுக்குவதற்கு இந்தியா ஆதவளித்தது. இந்திய நலனுக்காக ஈழத்தமிழர்கள் பலியிடப்படுகிறார்கள். இன்னும் தமிழ் மக்களுடைய அரசியற் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு இந்தியா காரணமாக உள்ளது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வந்தது அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி). ஆனால், இப்பொழுது இந்த நிலைப்பாட்டிலிருந்து அது விலகியிருக்கிறது. அல்லது தணிந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்தியாவுடன் நெருக்கத்தைக் காட்டுகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தியத் தூதுவர்கள், பிரதானிகளுடனான சந்திப்பில் கஜேந்திரகுமார் மலர்ந்த முகத்துடன் கைகுலுக்குவதையும் நெருக்கமாக நின்று படங்களுக்குப் போஸ் கொடுப்பதையும் பார்க்கலாம்.
இப்போது “இந்தியாதான் தமிழ் மக்களுக்குப் பலமாக, ஆதாரமாக நிற்க வேண்டும்” என்கிறார் கஜேந்திரகுமார். “வடக்குக் கிழக்கில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தித்திட்டங்களுக்கு நாம் முழுமையாக ஒத்துழைப்போம் என்பதோடு, வடக்குக் கிழக்கில் சீனாவுக்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது. அதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை” என்றும் சொல்லியிருக்கிறார்.
ஆனால், இலங்கை அரசின் அல்லது NPP – JVP யின் பார்வையும் அணுகுமுறையும் அவை பெற்றுக் கொள்ளும் லாபங்களும் வேறு. கஜேந்திரகுமார் தரப்பின் பார்வையும் அணுகுமுறையும் தமிழர் தரப்புப் பெற்றுக் கொள்ளக் கூடிய லாபங்களும் வேறு. இங்கே நட்டங்களே அதிகமாகும். இது சரணாகதி அரசியலாகும். அதாவது கையறு நிலையில் இருப்பதன் வெளிப்பாடு. இந்தியாவின் ஆக்கிரமிப்புசார் நடவடிக்கைகளுக்கு தென்னிலங்கையில் (சிங்களத்தரப்பில்) குறைந்த பட்சம் எதிர்ப்பாவது உள்ளது. வடக்குக் கிழக்குத் தமிழர் பகுதிகளில் அது அறவே இல்லை. ஆனால், இந்தத் தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தும் விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் தங்களுடைய ஆதர்சமாகக் காட்டிக் கொள்பவையாகும். புலிகளிடம் இந்தியா குறித்த எச்சரிக்கை உணர்வே மேலோங்கியிருந்தது. அது தவறாக இருக்கலாம். அப்படியென்றால் புலிகளிடமிருந்து தாம் எந்தெந்த இடங்களில் வேறுபடுகிறோம் என்பதை இந்தச் சக்திகள் சொல்ல வேண்டுமல்லவா! தேர்தலுக்கு ஒரு தோற்றமும் நடைமுறை அரசியலில் இன்னொரு தோற்றமுமாக இருக்க முடியாதல்லவா?
இதொரு புறமிருக்க, இந்தியப் பிரதமரின் வருகை இலங்கைக்குப் பல வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியமாக இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் எட்டப்பட வேண்டிய பொருளாதார விருத்திக்கும் இந்தியா பங்களிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் வரி அதிகாரிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இலங்கை இருவழிகளில் முயற்சிக்க வேண்டியுள்ளது. ஒன்று அமெரிக்காவுடன் இது குறித்துப் பேசித்தீர்வு காண்பது. ஆனால், அது சற்றுக் கடினமான விடயம். ஏனென்றால், அமெரிக்க நிர்வாகம் தனியே இலங்கைப் பொருட்களுக்கு மட்டும் வரி அதிகரிப்பைச் செய்யவில்லை. அமெரிக்காவுக்குள் வரும் பொருட்கள் அனைத்துக்கும் வரி அதிகரிப்பைச் செய்யும் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் ட்ரம்ப். ஆகவே இலங்கைக்குத் தனியாக எந்தப் பிரத்தியேகச் சலுகைகளையும் ட்ரம்ப் செய்யக் கூடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே மாற்று வழியைத் தேடுவதே இலங்கைக்கான ஒரு மார்க்கமாகும். அந்த மாற்று வழிக்கு இந்தியாவுடன் நெருக்கமாகி, வேறு வழிகளில் பொருளாதார மேம்பாட்டுக்கு முயற்சிப்பது.
இரண்டாவது, இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது உடனடியாகவே கை கொடுத்தது இந்தியாதான். குறிப்பாக மோடியின் அரசாங்கம். ஆகவே தொடர்ந்தும் இந்திய உதவியை நாட வேண்டிய நிலையிற்தான் இலங்கை உள்ளது. குறைந்த பட்சம் இந்தியாவுடன் நட்புறவில் இருக்க வேண்டிய நிலையில். என்பதால்தான் மோடிக்கு இலங்கையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலமொன்றில் கிடைக்கும் வரவேற்பைப் போல மோடி புகழ்பாடி வரவேற்கப்பட்டதை இங்கே கவனிக்கலாம். இதை அநுர குமாரதிசநாயக்க மட்டுமல்ல, ரணிலோ மகிந்தவோ மைத்திரியோ சரத் பொன்சேகாவோ யார் ஆட்சியிலிருந்தாலும் அவர்கள் செய்திருப்பார்கள்; செய்ய வேண்டியிருந்திருக்கும்.
இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் இந்தியாவுடன் இலங்கை நிபந்தனைகளற்ற உறவைக் கொள்ளலாம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. பதிலாக நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அனைத்துத் தரப்பின் ஆதரவையும் திரட்டிக் கொள்ள வேண்டும். அதேவேளை ஆதரவளிப்பதன் வழியாக வல்லாதிக்கச் சக்திகள் நீண்டகால அடிப்படையில் நாட்டுக்கு எதிராக – நாட்டைச் சுரண்டும் வழிகளையும் உருவாக்கி விடுவதுண்டு. அதில் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக நாட்டின் சுயாதீனத்தை முடிந்தளவுக்குப் பாதுகாக்கும் விதத்தில் விடயங்களைக் கையாள வேண்டும்.
இதற்கு இரண்டு வகையான உபாயங்கள் முக்கியமானவை. ஒன்று எதிர்க்கட்சிகள் இப்போதுள்ளதைப்போல தமது எதிர்ப்பைக் காட்டுவதாகும். அவ்வாறான எதிர்ப்பைக் காட்டி, “நெருக்கடியைத் தரும் திட்டங்களையும் உடன்படிக்கைகளையும் செய்ய முடியாமலுள்ளது” என்று அரசாங்கம் தப்பித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இரண்டாவது, நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைத்து அரசியற் தலைவர்களும் தரப்புகளும் சேர்ந்து இயங்குவது. இது இலங்கை போன்ற நாடுகளில் சாத்தியக்குறைவானது. இங்கே நிலைமையை விளங்கிக் கொண்டு அரசியல் செய்வதற்குப் பதிலாக, அதிகாரத்திலிருக்கும் தரப்புக்கு எதிராக அரசியல் செய்வதே முக்கியமான பண்பாக உள்ளது. என்பதால் இதற்குச் சாத்தியமே இல்லை. ‘தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்போம்‘ என்று பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்திருந்த போது ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்ததும் அதனை எந்தத் தரப்பும் பொருட்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் இங்கே நினைவு கொள்ளத்தக்கது.
இருந்தாலும் இப்போது அமெரிக்காவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள வரிவிதிப்புக்கு மாற்று யோசனைகள் குறித்தும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பொருத்தமான தீர்வைக்குறித்துச் சிந்திப்பதற்கும் இந்த வாரம் கொழும்பில், ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பங்குபற்றுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அமெரிக்காவில் தங்கியிருக்கும் பொருளாதார உறவுக்கு நிகராக இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையைச் செய்ய வேண்டும் என்று ரணில், அநுர அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறார். இதை அவர் இந்தியப் பிரதமர் இலங்கையில் நிற்கும்போது சொல்லியிருப்பது கவனத்திற்குரியது.
நாடு சந்திக்கும் நெருக்கடி என்பது அனைவருக்கும் பொதுவானது. நெருக்கடியின்போது உண்டாகும் வெளித்தரப்பின் அரசியல் அழுத்தங்களும் விளைவுகளும் நீண்டகாலத்துக்குச் சுமையாக இருக்கக் கூடியது. ஏறக்குறைய அதுவொரு பேரபாயமாகும். என்பதால்தான் நாட்டின் நலனைக் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டியது அரசியலாளர்களின் கடமையாகிறது. அரசியலாளர்கள் என்றால், கட்சி அரசியலில் ஈடுபடுவோர் என்று அர்த்தமாகாது. அதற்கும் அப்பால், அரசியல் அறிஞர்கள் – ஆய்வாளர்கள் – கொள்கை வகுப்பாளர்கள் – பல்கலைக்கழகங்களில் செயலாற்றும் அரசியல் – பொருளியில் தரப்பினர் – ஊடகத்துறையினர் என அனைத்துத் தரப்பையும் சேரும். இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பும் ஏதோ ஒரு வகையில் அரசியலோடு நேரடியாகச் சம்மந்தப்பட்டே உள்ளன. உதாரணமாக மதப் பிரிவினர் கூட. ஆகவே, தேசிய நெருக்கடிகளைக் குறித்துச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. இதை உணராமல் அவரவர் தத்தமது அரசியற் சுற்று வளையங்களுக்குள் நின்று செயற்பட விளைந்தால், அந்த வளையமே சுருக்காக அவர்களுக்கும் மாறும். நாட்டுக்கும் சுருக்குக் கயிறாகும்.
இது தனியே இந்தியாவுடனான விடயத்துக்கோ மோடியின் வருகைக்கோ மட்டுமானதல்ல. மோடியை அடுத்து சீனத் தரப்பு ஒரு சுற்று இலங்கைக்கு மேற்கொள்ளக் கூடும். இன்றைய பொருளாதாரப் போட்டியில் சீனா இலங்கையைக் குறி வைத்தே உள்ளது என்பதையும் சகலரும் அறிவர். ஆக, தொடர்ந்து அனைத்துத் தரப்போடும் களமாட வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது. இலங்கையின் நிலைமையும் அதனுடைய அமைவிடமும் அப்படியானது. என்பதால் இது தவிர்க்கவே முடியாதது.