Pagetamil
இலங்கை

மாணவியின் வினாத்தாளில் திருத்தம் செய்த நண்பி; மாணவியை தாக்கிய ஆசிரியருக்கு பிணை: பருத்தித்துறையில் சம்பவம்!

பருத்தித்துறை வட இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தாக்கிய ஆசிரியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை பருத்தித்துறை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

பாடசாலை விடுமுறை காலத்தில், தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வடஇந்து ஆரம்பப்பாடசாலை அண்மைக் காலமாக சர்ச்சைகளிற்கு பெயர் பெற்றுள்ளது. அண்மையில் பாடசாலை விளையாட்டு போட்டியில் தனது பிள்ளை பழிவாங்கப்பட்டதாக குறிப்பிட்டு, நியாயம் கேட்க முற்பட்ட தந்தையொருவரால் சர்ச்சையேற்பட்டிருந்தது.

மாணவி தாக்கப்பட்ட தற்போதைய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் தமிழ் பக்கத்திடம் தெரிவித்த தகவல்கள் வருமாறு-

“தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்பில் மாணவர்களுக்கு பரீட்சை நடத்தப்படுவது நாளாந்த வழக்கம். கடந்த புதன்கிழமையும் பரீட்சை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவியின் பரீட்சை தாளை, பக்கத்திலிருந்த மாணவி வாங்கி, அதில் திருத்தம் செய்து, புள்ளியை அதிகரிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், பரீட்சை தாளுக்குரிய மாணவி மறுத்து, அப்படி செய்ய வேண்டாமென்றார். என்றாலும், பக்கத்திலிருந்த மாணவி பரீட்சை தாளில் சில திருத்தங்கள் செய்து, 85 புள்ளிகளாக உயர்த்தியுள்ளார்.

அன்று நடந்த பரீட்சையில் 85 புள்ளிகள்தான் அதிகம். 85 புள்ளிகள் எடுத்தவர்கள் எழும்புமாறு ஆசிரியர் கூறிய போது, இரண்டு மாணவிகள் எழுந்துள்ளனர். தற்போது சர்ச்சையில் சிக்கிய மாணவியும் எழுந்தவர்களில் ஒருவர். சந்தேகமடைந்த ஆசிரியர், அவரது பரீட்சை தாளுடன் முன்னுக்கு வருமாறு கூறினார்.

அவர் பரீட்சை தாளுடன் முன்னுக்கு செல்லும் போதே, பயந்துள்ளார். ஆசிரியர் விடயத்தை கேட்க, பக்கத்திலிருந்த மாணவி பரீட்சை தாளில் மாற்றம் செய்ததாக கூறியுள்ளார். பக்கத்திலிருந்த மாணவியை அழைத்து விசாரித்த போது, அவர் தானே அதனை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

உண்மையை சொன்னதால் அவருக்கு தண்டனையில்லையென அனுப்பி விட்டு, பரீட்சை தாளுக்குரிய மாணவியை தடியினால் தாக்கியுள்ளார். அத்துடன் தினமும் இப்படித்தான் செய்து அதிக புள்ளி எடுக்கிறாயா என்ற சாரப்பட பகிரங்கமாக பேசியுள்ளார். இதனால் வகுப்பிலுள்ள அனைவரும் சிரித்தனர். அந்த மாணவி வழக்கமாக அதிக புள்ளி எடுப்பவர்களில் ஒருவர். இதனால் மனமுடைந்த மாணவி அழுதபடி வீட்டுக்கு வந்தார்.

விடயத்தை கேட்டதும், ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் மாணவியை அடித்தீர்கள் என கேட்டபோது, நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்ற பாணியில் பதிலளித்தார். இதையடுத்து, பருத்தித்துறை பொலிசில் முறையிட்டு விட்டு, மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தோம். அன்று மாலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்“ என்றனர்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து வெளியான ஏனைய ஊடக செய்திகளில்,  சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்று முன் தினம் கைது செய்த பருத்தித்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டார். ஆசிரியரை நேற்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை பொலிசார் முற்படுத்தியிருந்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இது தவறான தகவல். அன்று மாலை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்ட ஆசிரியர், அன்று இரவே வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். மறுநாள் காலையில் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆசிரியர் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை குறித்த ஆசிரியரை ஒரு ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையினை வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர் தொடர்பாக ஏற்கெனவே தொடர்ந்து சர்ச்சை நிலவி வந்துள்ளது. பாடசாலை அதிபர், ஆசிரியர் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் இதுவரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி தாக்கப்பட்டது தொடர்பில் மாணவியின் குடும்பத்தினர் உள்ளிட்ட சில தரப்புக்களின் கருத்துக்களும் இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அல்லது ஆசிரியர் தரப்பினர் தமது நிலைப்பாட்டை தெரிவித்தால் தமிழ்பக்கம் அதனையும் பிரசுரிக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘அம்மா என்னை மன்னித்து விடுங்கள்’: யூடியூப்பர் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil

பெண் சட்டத்தரணியை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Pagetamil

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!