வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்

Date:

வெள்ளை ஈ ஆனது தற்போது வட பகுதியில் முன்னைய காலங்களிலும் பார்க்க மிக வேகமாகப் பரவி வருகின்றது. இப் பீடையானது இந்தியாவில் 2016ம் ஆண்டளவில் கண்டறியப்பட்டாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் இதன் தாக்கமானது 2022ம் ஆண்டளவிலே பெரிதும் உணரப்பட்டது. இது பிரதானமாக மஞ்சள் நிறத்தினையுடைய தாவரங்களில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. செவ்விளநீர் மரங்கள், குரோட்டன் போன்றன இதற்கு உதாரணங்களாகும். இதன் பிரதான விருந்து வழங்கித் தாவரங்களாக வாழை, பப்பாசி, தேசி, தோடை, கொய்யா போன்ற மரங்களினைக் குறிப்பிடலாம்.

தென்னையினைப் பொறுத்தவரையில் ஓலையின் தோற்றவியலானது இவை தங்கியிருந்து பெருகுவதற்குரிய சிறந்த ஆதாரமாக விளங்குவதனாலும் வெள்ளை ஈ ஆனது உறிஞ்சக் கூடியளவிற்கு சாறு அதிகம் காணப்படுவதாலும் வெள்ளை ஈயினது பறப்புயரத்திற்குள் தென்னையின் உச்சிப் பகுதி வருவதாலும் ஏனைய பயிர்களினை விட தென்னையில் இதன் தாக்கமானது அதிகம் உணரப்படுகின்றது.

சூழல் வெப்பநிலையானது அதிகரிக்கும் போது வெள்ளை ஈக்களின் பெருக்கமும் பரவலும் சடுதியாக அதிகரிக்கும். வெள்ளை ஈக்களின் தாக்கத்தினை அவதானிக்கையில் மழைகாலத்தில் இவற்றின் தாக்கம் மிக மிக குறைவாகவும் கடும் வெயிற் காலத்தில் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கின்றது. கடும் வெயிற் காலத்தில் சில சமயங்களில் 200 மடங்கு பெருகும் தன்மையும் காணப்படுகின்றது.

தென்னைகளின் இதன் பரவலினை அவதானிக்கும் போது கிழே சுற்று ஓலைகளிலிருந்து குருத்துப் பகுதியினை நோக்கி இதன் பரவலானது குறைந்து கொண்டு செல்லும். அதாவது அடிப்புற ஓலைகளிலே அதன் முட்டைகள், குடம்பிகள், சிலந்தி வலை போன்ற வெள்ளை நிற வளையம், வளையமான கூடுகள் அவதானிக்கப்படுகின்றன. வெள்ளை ஈ ஆனது ஓலைகளின் அடிப்பகுதியில் இருந்து சாற்றினை உறிஞ்சி குடிப்பது மட்டுமல்லாமல் தேன் போன்ற ஒட்டும் தன்மையான கழிவினையும் வெளிவிடுகின்றன. இவை அடுத்த வரிசை ஓலைகளின் மேற்பரப்பில் விழுவதாலும் அதில் பங்கஸ் தொற்று ஏற்படுவதனால் கறுப்பு நிறமாக மாற்றமடையும்.

வெள்ளை ஈ இனது தாக்கம் ஏற்பட்ட ஓலைகளின் மேற்பரப்பில் கழிவு ஓயில் ஊற்றியது போன்று கறுப்பு நிறமாக மாற்றமடைந்திருக்கும். ஓலைகளின் கீழ் புறத்தில் சிலந்தி வலை போன்று வளையம் வளையமாக வெள்ளை நிறத்தில் கூடுகள் தென்படும். இவ் வளையப் பகுதியினை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் இடத்து வெள்ளை ஈ இனது முட்டைகள், குடம்பிகள் போன்றவற்றினை அவதானிக்க முடியும்.

இலங்கையில் இப் .பூச்சியின் தாக்கம் வரமுன்னரேயே பல வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் இத்தாக்கம் ஏற்பட்டதால் அவர்களுடைய ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம் வெள்ளை ஈ ஆனது தென்னையில் இறப்பினை ஏற்படுத்தாது என்றும் பொருளாதார பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனையும் அறியமுடிகின்றது. பொருளாதாரப் பதிப்பானது கழிவு ஓயில் போன்ற படிவானது ஓலைகளின் மேற்பரப்பில் படிவதனால் உணவுத் தொகுப்பானது பெரிதும் பாதிக்கப்படுகின்றது. ஒளித் தொகுப்பு பாதிக்கப்படுவதனால் உணவுத் தொகுப்பு பாதிக்கப்பட உணவு ஒதுக்கமானது குறைக்கப்படுகின்றது. உடனடி விளைவாக பாளைகள் உருவாக்கப்படல், குரும்பைகள் விருத்தியடைதல் போன்றவற்றுக்கான உரிய போசணைப் பதார்த்தங்கள் கிடைக்கப் பெறாமையினால் குரும்பைகள், இளம் தேங்காய்கள் முதிர்ச்சியடைய முன்னரேயே கொட்டுப்படும் சாத்தியத் தன்மைகள் அதிகம் அவதானிக்கப்படுகின்றன. அத்துடன் நீண்டகாலப் போக்கில் தென்னையின் உற்பத்தியினையும் அதாவது தேங்காய் உருவாவதனையும் குறைக்கும் சாத்தியத் தன்மை காணப்படுகின்றது.

இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

மனிதர்கள் போசாக்குள்ள உணவுகளினை உள்ளெடுக்கும் போது அவர்களிற்கு எவ்வாறு நோய் எதிர்ப்பு தன்மை உருவாகின்றதோ அவ்வாறே தென்னைகளிற்கும் சரியான பசளைப் பிரயோகம், நீர்ப்பாசனம் போன்றவற்றினை செய்யும்போது உரிய போசணைச் சத்துக்கள் கிடைக்கப்பெறுகின்றமையால் அத் தென்னைகளிற்கு நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து வெள்ளை ஈ தாக்கத்தின் அளவினைக் குறைக்க கூடியதாக இருக்கும்.

தண்ணீரை Hose Pipe உடன் கூடிய Power Spray மூலம் ஓலையின் கீழ் புறமாகவும் மேற்புறமாகவும் ஒன்றுவிட்ட ஒரு நாளைக்கு Spray பண்ணுவதன் மூலம் இவற்றின் பெருக்கத்தினைக் குறைக்கலாம். 10லீ. நீரிற்கு 100எம்.எல் வேப்பெண்ணெயை, 50 கிராம் சவர்க்கார தூளுடன் சேர்த்து இரண்டு கிழமைக்கு ஒரு தடவை Spray பண்ணுவதன் மூலமும் இவற்றின் பெருக்கத்தினைக் குறைக்கலாம்.

வெள்ளை ஈ இனைக் கட்டுப்படுத்துவதற்கு இரசாயனங்களினை பாவித்தலை குறைப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் ஓலைகளின் கீழ்புறம் வெள்ளை ஈக்களை இயற்கையாகவே கட்டுப்படுத்தக்கூடிய பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. இரசாயனங்களை விசிறும் போது இவையும் அதிகளவில் அழிக்கப்படுகின்றன. ஆத்துடன் இவற்றின் பெருக்கவீதமும் மிகவும் குறைவாக இருப்பதனால் இவற்றின் மீளுருவாக்கம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. மற்றும் மகரந்த சேர்க்கைக்குரிய தேனீக்களும் இரசாயனங்களின் பாவனையால் அழிக்கப்படுகின்றன. சாதாரணமாக வயல்களிற்கு இரசாயனங்கள் விசிறும் போது கிடையாக கீழ் நோக்கியே விசிறப்படுகின்றன. ஆனால் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு உயரமான தென்னைகளிற்கு இரசாயனங்களினை மேல் நோக்கி விசிறுவதனால் அவை சூழலிற்கு பரவும் அளவு அதிகமாக இருப்பதனால் திறந்த கிணறுகள், நீர் நிலைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

தென்னை ஓலைகளின் மேற்புறமாக பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டு கறுப்பு நிறம் முற்றுமுழுதாக காணப்படின் அவ் ஓலைகளினை அகற்றிய பின்னர் மற்றைய ஓலைகளிற்கு தண்ணீரை அல்லது வேப்பெண்ணெய்க் கரைசலினை விசிறலாம். தென்னை மரங்களிலிருந்து முற்று முழுதாக ஓலைகளினை வெட்டுதல் கூடாது. அவ்வாறு முற்று முழுதாக ஓலைகள் அகற்றப்படின் மரம் இறக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும். ஓலைகளினை அகற்றும் போது வெட்டிய ஓலைகளின் எஞ்சிய பாகங்களிற்கு கட்டாயம் கழிவு ஓயில் பூசுதல் வேண்டும் அல்லாவிடின் அவ் மரங்கள் செவ்வண்டுத் தாக்கத்திற்குள்ளாகி இறக்கும் சூழ்நிலை ஏற்படும்.

பொதுவாக மஞ்சள் நிறம் பீடைகளினைக் கவருவதால் மஞ்கள் பொலித்தீனில் கிறீஸ் அல்லது வசலின் தடவி தென்னை மரங்களின் அடிப்பகுதிக்கு அல்லது உச்சிப்பகுதிக்கு சுற்றிக்கட்டுவதனாலும் இதன் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

வெள்ளை ஈ தொடர்பான ஆலோசனைகளையோ அல்லது Hose Pipe உடன் கூடிய Power Spray ஜ கிரமமான முறையில் பெறுவதற்கோ கமநலசேவை நிலையங்களிலுள்ள தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினையோ அல்லது யாழ்ப்பாண பிராந்திய காரியாலயம், பளையிலுள்ள (தொலைபேசி இல: 0212284501) பிராந்திய காரியாலயத்தையோ தொடர்பு கொள்ளவும்.

ஒவ்வொரு கிராமங்களிலுமுள்ள இளைஞர் யுவதிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் வெள்ளை ஈயினைக் கட்டுப்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

ஈ.சற்குணன்
பிராந்திய முகாமையாளர்(பதில்)
யாழ்ப்பாணம்

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்