நாட்டில் தற்போது தேங்காய் விலை பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கம் தேங்காய் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றதுடன், மக்களுக்கு சாதாரண விலையில் தேங்காய் வழங்கும் பொருட்டு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமாக சதோச நிறுவனத்திற்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நேற்றைய (25.02.2025) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தேங்காய் விலையேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றும், குறிப்பாக விலங்குகள் பிரச்சினை, உர பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேங்காய் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கம்பஹா மாவட்டத்தில் 2.5 மில்லியன் தென்னங்கன்றுகளை நடும் வேலைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் எதிர்கால தேங்காய் உற்பத்தியை அதிகரித்து, தேங்காய் விலையை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், தற்போது தேங்காய் விலை உயர்வால் மக்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.