மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமை மனுக்களின் விசாரணைக்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று (24) ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பிரதிவாதி தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றத்தின் முன் பல்வேறு சாட்சியங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரர் பொலிஸ் மா அதிபராக கடமைகளைச் செய்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விரைவாக விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
நீதிமன்றம், முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தொடர்புடைய மனுக்களை மே 6, 7 மற்றும் 8ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
மேலும், தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கான அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகள் சட்டத்திற்கு முரணானவை என மனுதாரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.