பகவத் கீதை மீது கைகளை வைத்து பதவிப்பிரமாண உறுதிமொழியளித்த எவ்.பி.ஐ இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எவ்.பி.ஐ (FBI)யின் 9வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுள்ளார். இது, இந்த பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் வகிக்கும் முதல் தடவையாகும்.
காஷ் படேலின் பதவியேற்பு விழாவில், அவரது காதலி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்த அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி முன்னிலையில், இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையின் மீது கைகளை வைத்து பதவிப்பிரமாண உறுதிமொழியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு முன்பு, வெர்ஜீனியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் பகவத் கீதையின் சாட்சியாக பதவியேற்ற முதல் நபராக இருந்தார். அவர் கிழக்குக் கடற்கரையை பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவிற்குப் பின்னர் காஷ் படேல் பேசியபோது, “உலகின் மிகப்பெரிய நாடான அமெரிக்காவின் சட்ட அமுலாக்க முகாமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். FBI அமைப்பிற்குள் மற்றும் வெளியிலும் பொறுப்புடன் செயற்படுவேன்” என்று உறுதிமொழி அளித்தார்.
இந்த நிகழ்வு இந்திய அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் இந்திய வம்சாவளியினரிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.




