மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நேற்று (20) இரவு இடம்பெற்றதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையில் இருந்து புல்லுமலை வழியாக மட்டக்களப்புக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து பஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவரை சாரதி மற்றும் நடத்துனர் கேலி செய்ததாகக் கூறி, பஸ்ஸை நிறுத்தி அவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவதினமான நேற்று மாலை 5.30 மணியளவில், மட்டக்களப்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பஸ் புல்லுமலை பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, அங்கு காத்திருந்த இருவர் பஸ் சாரதி, நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் இருவரையும் தாக்குதல் நடத்தினர்.
தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த கரடியனாறு பொலிஸார், தாக்குதலை நடாத்திய இருவரையும் கைது செய்ததோடு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.