போலித் தங்கத்துண்டுகள் விற்பனை செய்த பூசகர் உள்ளிட்ட மூன்று பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதையலிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் போலி தங்கத் துண்டுகளை அனுராதபுரத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவரிடம் கொடுத்து 22.86 மில்லியன் ரூபாயினை மோசடி செய்த குற்றச்சாட்டில் பூசகர், அவரது மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 20ம் திகதி (நாளை) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் (19) அனுராதபுரம் மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில், முன்னதாக குறித்த சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களின் பிணை இரத்து செய்யப்பட்டு, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
மேலும், இதே சம்பவத்தில் முன்பே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான பூசகரின் இரண்டு மகன்கள் மற்றும் பேரப்பிள்ளை ஒருவரை எதிர்வரும் 20ம் திகதி (நாளை) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.