ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த தொழிற்சாலை முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.
தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் அமைந்துள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று (18) இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, முழு கட்டிடமும் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.
சுமார்இரவு 11.30 மணியளவில் தொடங்கிய தீ, தொழிற்சாலையின் பின்புறத்தில் உருவாகி, முன் மற்றும் மேல் தளங்களுக்கும் வேகமாக பரவியது. அப்போது தொழிற்சாலையில் யாரும் இல்லை என்பதால் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், அருகில் அமைந்திருந்த சோலார் மின் சாதனக் கடை மற்றும் அதன் பொருட்கள் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலைக்குள் நுழைய முடியாததால், தீ விரைவாக பரவியது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு, கோட்டே, மொரட்டுவ மற்றும் தெஹிவளை பகுதிகளிலிருந்து பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீ பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் அதிகாலை 5 மணி வரை கடுமையாக போராடினர்.
குறித்த பாரிய தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.