யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டத்திற்குச் செல்லும் ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது அரக்கத்தனமான கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், வாடகை அடிப்படையில் பேருந்து ஒன்றினைப் பெற்று பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், பளை பகுதியில் இத்தாக்குதல் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் எந்தவொரு உடல் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீசன், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் செயல் எனக் கூறியதோடு, நேற்றைய பொலிஸாரின் செயற்பாடுகளுக்கும், ஆசிரியர்கள் மீதான இன்றைய தாக்குதலுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் உடந்தையாக செயல்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் குறித்த எந்தவொரு கரிசனையும் இல்லாமல் செயல்படும் அரசாங்கம், மிக குறைந்தபட்சமாகவேனும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.