மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு யோகபுரம் பாடசாலைக்குள் மதுபோதையில் சிவில் உடையில் புகுந்து மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்ட போது கையும் களவுமாக சிக்கி உள்ளார்.
பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று (17 திங்கட்கிழமை) மாலை மூன்று மாணவிகளுடன் இவ்வாறு தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
இவ் விடயம் குறித்து, மாணவிகள் வெளியே கூறியதன் பின்னர் அங்கிருந்தவர்கள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் முரண்பட்டனர்.
சம்பவம் குறித்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
பொலிஸ் அதிகாரி மதுபோதையில் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த, மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொலிஸ் தரப்பில் அந்த அதிகாரிக்கு ஆதரவாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என்றும், தப்பிக்க உதவி செய்யும் முயற்சிகள் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம், பொலிஸ் அதிகாரிகள் மீதான நம்பிக்கையை கடுமையாக சீர்குலைத்திருப்பதோடு, மாணவிகள் உள்ளிட்ட பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. சட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொலிஸாரே இவ்வாறு நடந்துகொண்டால், இனி யாரிடம் பாதுகாப்பு தேடுவது? என்ற நிலை உருவாகியுள்ளதாக சமூகத்தவர் தெரிவிக்கின்றனர்.