வீடியோ கேமில் தோல்வியடைந்ததால் 11 வயது சிறுமியை கொடூர கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த துயரைச் சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. வீடியோ கேமில் தோல்வியடைந்ததன் காரணமாக தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், 11 வயது சிறுமியை ஒருவன் கொலை செய்துள்ள சம்பவம், நாட்டையே உலுக்கியுள்ளது.
Owen L எனும் நபர், ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிரணி வீரரிடம் தோற்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த Owen, அந்த வீரர் தன்னை கேலி செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல், தனது கோபத்தை யாரிடமாவது காட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அந்த நேரத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த Louise Lasalle என்ற 11 வயது சிறுமி அப்பகுதியில் சென்றுகொண்டிருந்தாள். சிறுமியை ஏமாற்றி ஒரு வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற Owen, தன் தேவைக்காக அவளிடம் இருந்த பணத்தை கொள்ளையடிக்க நினைத்துள்ளார்.
பயத்தில் துடித்த சிறுமி அலறியவுடன், பதற்றமடைந்த Owen, அவளை தரையில் தள்ளி, கூர்மையான கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். அந்தக் காயங்களுக்குள்ளாகிய சிறுமி, குறித்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பள்ளியில் இருந்து வீடு திரும்பாததால், Louise இன் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர். சுமார் 12 மணி நேரத்துக்குப் பின்னர், பாரீஸிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பிரதேசத்தில் சிறுமியின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை செய்தபின், Owen வீட்டிற்கு சென்று, தனது காதலியிடம் தான் பயங்கரமான ஒரு செயலில் ஈடுபட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தன் குற்றச்சாட்சிகளை அழிக்க, தனது உடைகளை பிளீச்சில் ஊறவைத்து குப்பையில் கொட்டியதோடு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் வீசி எறிந்துள்ளார்.
இதற்கிடையில், பொலிஸாரின் விசாரணையில், Owen தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தனது காதலியும் இது குறித்து பொலிஸாரிடம் எதுவும் தெரிவிக்காததால், அவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.