தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில், அருகிவரும் உயிரினமாக உள்ள டிராஜாகாஸ் (Yellow-Spotted River Turtles) ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியாக, பல்லாயிரக்கணக்கான ஆமைக் குஞ்சுகள் இயற்கை சூழலில் விடப்பட்டுள்ளன.
இவ்வகை ஆமைகள் பெரும்பாலும் ஆறுகளின் கரைகளிலும், காடுகளின் நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை. அவை கடற்கரையில் அல்லது ஆற்றங்கரையில் முட்டையிடும் போது, பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளால் அவை அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த உயிரினத்தின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தடுக்கும்முகமாக, பிரேசிலின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், இகாபோ ஆசு ஆற்றங்கரையில் 5,000 டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகளால் அவை ஆற்றில் விட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. பொருத்தமான சூழலில் இந்த ஆமைகள் வளர்ந்து, இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ள இந்த நடவடிக்கை, இந்த ஆமைகளின் இன அழிவை தவிர்க்க ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.