மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்ட மீனவர் தங்குமிடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் கடந்த 13 ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி பாழாகி வரும் நிலையில், அங்குள்ள உதிரிப்பாகங்கள் காணாமல் போவதுடன், ஏனையவை துருப்பிடித்து இயங்காத நிலையில் காணப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் இந்த வசதிகள் அமைக்கப்பட்ட போதிலும், தற்போது அதற்கான பயன்பாடு இல்லாமல் இருப்பதோடு, முறையான பாதுகாப்பு இன்மையால், அவை முழுமையாக அழியும் அபாயத்தில் உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் வாழும் சுமார் 5000 மீனவர்கள் அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மீனவர்கள் கடற்கரையில் தங்குவதற்கான வசதிகளும், அவர்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் வசதிகளும் இல்லாமல் போவதால், அவர்கள் தினசரி பணிகளில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, கடற்றொழில் மேற்கொள்ளும் மீனவர்கள் தங்குமிட வசதிகளின் குறைவால் அதிகமான செலவுகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள், இந்த வசதிகளை மீண்டும் புனரமைத்து, செயல்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் மக்களுக்காக பல நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்த முனைந்திருப்பதை கருத்தில் கொண்டு, மீனவர்களின் இந்த முக்கிய கோரிக்கையும் உரிய முக்கியத்துவத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அத்துடன், மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கையாளக்கூடிய முறையில் இருப்பதற்கும், அரசாங்கம் இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மீனவர் தங்குமிடத்தையும் எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் உடனடியாக புதுப்பித்து வழங்க வேண்டும் என்பதை தமது தாழ்மையான கோரிக்கையாக மீனவர்கள் முன்வைத்துள்ளனர்.