யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் சுற்றியுள்ள 14 ஏக்கர் நிலம் விகாரைக்கு சொந்தமானது என்றும், இதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், குறித்த நிலத்தில் சைத்யம், புத்த மெதுரா, தியான மண்டபம், பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் எனவும் அந்த சம்மேளனம் கோரியுள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்குக் கையளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இம் முடிவை விகாரை நிர்வாகத்தினர் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விகாரை நிர்வாகத்தினர் அழைக்கப்படாததால், அங்கு எடுக்கப்பட்ட எந்த முடிவுகளும் செல்லுபடியாகாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை தமிழ் சமூகத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. யாழ்ப்பாணம் போன்ற தமிழர் பெருமளவில் வாழும் ஒரு இடத்தில் இந்த விகாரை அமைக்கப்பட காரணம் என்ன என்பதே முக்கியமான கேள்வியாகியுள்ளது. மேலும் இன்று சட்டவிரோத விகாரையை காப்பாற்ற அரசின் நிலைப்பாடு மேலும் கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த காலங்களில் அரசில் இருந்த சில சிங்கள தலைவர்களே தமக்குத் தேவையான நேரங்களில் புத்தர் சிலைகளை அகற்றிய வரலாறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, 1992ம் ஆண்டு, பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அருகிலிருந்த தும்முள்ள சந்தியில் அமைந்திருந்த புத்தர் சிலை, பௌத்த பிக்குமாரின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அதன் பின்னர், குறித்த இடத்தில் நான்கு சந்திகள் இணையும் வகையில் சுற்றுவட்டம் அமைக்கப்பட்டது.
அதேபோல், 1997ல், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவால், கொழும்பு புஞ்சி பொரளை நான்கு சந்தியில் அமைந்திருந்த புத்தர் சிலை ஒரு இரவில் இடித்து அகற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த புத்தர் சிலை அமைந்த இடத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் நடந்ததாகக் கூறப்பட்டதால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனினும், பௌத்த பிக்குமாரின் எதிர்ப்பினால் மீண்டும் அங்கு சிறிய புத்தர் சிலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு பகுதிகளில் அரசியல் தேவைகளுக்கேற்ப புத்தர் சிலைகள் அகற்றப்பட்டு வந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் புத்தர் சிலைகளுக்கு ஏன் அரசு அனுமதி வழங்குகிறது? என்ற கேள்வி தமிழ் சமூகத்தில் எழுந்திருக்கிறது.
வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமை தொடர்பான விவகாரங்கள் சமூக அரசியல், வரலாற்று பாரம்பரியம் மற்றும் இன உறவுகளுடன் இணைந்துள்ளன. இந்த நிலத்தை அரசால் அல்லது மத நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதைப் பொது மக்கள் ஏற்க வேண்டுமா என்பதும் விவாதத்துக்குரியதாக இருக்கிறது.
அரசு மற்றும் அதிகாரிகள் இந்த நில விவகாரத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது குறித்து தமிழ் சமூகத்தால் முக்கியமாக பார்க்கப்படுகிறது.