யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் 15 பிரதேச செயலகங்களில் மொத்தம் 162 வெற்றிடங்கள் காணப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை (31) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் விவாதங்கள் இடம்பெற்றன. இதில், மாவட்டத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறை தொடர்பில் அரசாங்க அதிபர் பிரதீபன் தனது கவலை வெளியிட்டார்.
அவர் குறிப்பிட்டதாவது, நிர்வாக கிராம உத்தியோகத்தர் – 06, கிராம உத்தியோகத்தர்கள் – 65, முகாமைத்துவ உதவியாளர்கள் – 27, அலுவலக உதவியாளர்கள் – 45, சாரதிகள் – 12, மற்றும் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் – 08 பேர் உட்பட மொத்தம் 162 வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க, முப்பதாயிரம் பேரை அரச சேவையில் இணைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என உறுதிபட அறிவித்தார்.




