கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்னசேகர, தனது செயலாளர் திரு ஜே.எஸ். அருள்ராஜ் மற்றும் குழுவினருடன் நேற்று (26) திருகோணமலை புல்மோட்டை பகுதிக்கு ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
ஆய்வு தொடர்பில் முதலில் புல்மோட்டை பொது மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர், அங்கு நிலவும் சிக்கல்களை ஆய்வு செய்து, மருத்துவமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார். மருத்துவமனையின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தீர்வுகளுக்கான முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டன.
அதன் பின்னர், 2015ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, குச்சவெளி பிரதேச சபைக்குச் சொந்தமானதாக இருந்தாலும் இதுவரை பயன்படுத்தப்படாமலும் கைவிடப்பட்டும் காணப்படும் புல்மோட்டை பொதுச் சந்தை வளாகம் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது, இந்த வணிக வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்படும் எனவும், அதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆளுநர் உறுதியளித்தார்.
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தகுதியான சேவைகளை வழங்க வேண்டும் என்ற ஆளுநரின் இலக்கை பிரதிபலிப்பதாய் இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை, புல்மோட்டை பகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதற்கான உறுதியும் இந்த சுற்றுப் பயணத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.