தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையில் நாளை (27) திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, மீளவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி நாளைய சந்திப்பில் கலந்துகொள்ளாது என்பதால், தமிழரசுக் கட்சிக்கும் அவகாசம் வழங்கும் விதமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜேவிபி அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரம் கையிலெடுக்கப்பட்டால், அதை எப்படி எதிர்கொள்வது- அதற்காக தயார் நிலையில் இருப்பது தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் முன்முயற்சியில் இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன் உள்ளிட்டவர்களுடன் கஜேந்திரகுமார் சந்தித்து பேச்சு நடத்தினார். தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சு நடத்துவது என அப்போது திட்டமிடப்பட்டது.
எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதலால் இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி பங்கேற்பது- அல்லது முயற்சிக்கு ஒத்துழைப்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதை வலுப்படுத்தும் விதமாக- அண்மைய மத்தியகுழு கூட்டத்திலும் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. ஏனைய கட்சிகளின் முயற்சிக்கு ஒத்துழைத்து செல்லாமல்- தீர்வு விவகாரம் தொடர்பில் கட்சியினால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வரைபுகளின் அடிப்படையில் அரசுடன் பேசுவது என தீர்மானித்தனர்.
இந்த பின்னணியில், நேற்று (25) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செல்வராசா கஜேந்திரனும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்துக்கு சென்று, பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடன் பேச்சு நடத்தி, 27ஆம் திகதி சந்திப்புக்கான அழைப்பை கொடுத்தனர்.
குறுகிய அவகாசமே உள்ளதால், சந்திப்பில் பங்கேற்பது சாத்தியமில்லை- கட்சிக்குள் இது தொடர்பில் விவாதித்து முடிவெடுக்க அவகாசம் தேவையென சீ.வீ.கே பதிலளித்துள்ளார்.
இந்த பின்னணியில், நாளை 27ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு மீளவும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாளை திட்டமிட்டபடி ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்தலாம் எனவும், பின்னர் கட்சி முடிவின் அடிப்படையில் தாம் பங்கேற்பதாயின் பங்கேற்கலாமென தமிழரசுக்கட்சி பதில் தலைவர் கூறியதாகவும், எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு அவகாசம் வழங்கும் விதமாக சந்திப்பை தள்ளி வைத்துள்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.