சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது.
சூடானில் இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இடம்பெற்று வருகின்றது. இவ்விரு தரப்பினருக்கும் இடையேயான மோதல்கள் காரணமாக ஏற்படும் மனித உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயல்பட்டு வந்த ஒரு மருத்துவமனை மீது நேற்று முன்தினம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது மனிதநேயத்திற்கு எதிரான செயலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இக்கொடூர செயலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.