தடுக்க முயன்ற தன் தங்கையையும் தன் கணவர் விட்டுவைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பச் சண்டையின்போது கணவன் கடித்துக் குதறவே, மனைவியின் உதட்டிலிருந்து நிற்காமல் இரத்தம் கொட்டிய சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா அருகிலுள்ள நக்லா புச்சான் எனும் சிற்றூரில் குடும்பச் சண்டை காரணமாக கணவன், தன் மனைவியின் உதட்டை கடித்துள்ளார். இதனால் குறித்த மனைவியின் உதட்டில் மருத்துவர்கள் 16 தையல்கள் போட்டு உதட்டை ஒட்ட வைத்துள்ளார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை ( 24) அப்பெண் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது, வீட்டிற்கு வந்த அவருடைய கணவர் விஷ்ணு காரணமின்றி அவருடன் சண்டையிட்டதாகவும் அமைதியாக இருக்கும்படி கூறிய அப்பெண்ணை அவர் அடிக்கத் தொடங்கியதாகவும் காவல்துறை உயரதிகாரி மோகித் தோமர் விவரித்தார்.
அப்போது, திடீரென தன் கணவர் தன் உதட்டைக் கடித்ததால் ரத்தம் கொட்டியதாகவும் தடுக்க முயன்ற தன் தங்கையையும் அவர் அடித்ததாகவும் அப்பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தன் கணவரின் செயல் குறித்து தன் மாமியாரிடமும் மைத்துனரிடமும் தான் சொல்லியதாகவும் ஆயினும் அவர்கள் தன்னைத் திட்டியதோடு அடித்து உதைத்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
தகவலறிந்த அப்பெண்ணின் தந்தை, அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகாரளித்தார்.
இதனையடுத்து, அப்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனர் ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.
குறித்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை அப்பெண்ணால் வாயைத் திறந்து சொல்ல முடியவில்லை என்றும் அதனால் அப்பெண் ஒரு தாளில் எழுதிக் காட்டினார் என்றும் இதன் போது கூறப்பட்டது.
தன் கணவர், மாமனார், மைத்துனர்மீது அப்பெண் புகார் அளித்துள்ளார்.