உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா ஜனவரி 13ம் திகதி தொடங்கியது. பெப்ரவரி 26ம் திகதி வரை இந்த நிகழ்வு நடைபெறும் என்ற வகையில், கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதுமிருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கும்பமேளாவில் பங்கேற்க வந்துள்ள பக்தர்களுக்கான கூடாரங்கள் அமைந்துள்ள மகாகும்ப நகரின் செக்டார் 19 பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த தீ விபத்தில் 18 கூடாரங்கள் எரிந்து சேதமானது. எனினும், இதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், பிரயாக்ராஜில் இன்று (25) அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகா கும்பமேளா செல்லும் பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்களில் தீ பரவியதால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது.
கார்கள் முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன. இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
இதுதொடர்பாக தீயணைப்பு அதிகாரி விஷால் யாதவ் கூறுகையில், கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் தொலைதூர பகுதிகளலிருந்து வந்து, தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்தி வைத்துள்ளனர். வாகனத்தின் என்ஜின் சூடானதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காலை 6.30 மணிக்கு மாருதி எர்டிகா காரில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும், உடனே 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.