இரவு நேரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்யும் நோக்கில் அரசாங்கம் ஆய்வு மேற்கொண்டு இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை விளக்கினார்.
மாத்திறை, பொல்ஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற டீஜே இசை நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது. அப்போது, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், சுற்றுலா பயணிகள் புதிய அரசாங்கத்தின் கொள்கை காரணமாகவே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக குறித்திருந்தனர்.
இதே நேரத்தில், சுற்றுலாத் துறையின் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், 2005ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டில் இந்த தீர்ப்பு மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, அது அடிப்படையில் மாத்திரறை – பொல்ஹேன பகுதியில் இசை நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு முன்னதாகவே நிறுத்தப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனால், 2010ஆம் ஆண்டின் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, புதிய அரசாங்க கொள்கை காரணமாக அல்ல; காவல்துறையினர் அந்த இசை நிகழ்ச்சியை நிறுத்தியதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவர் மேலும், சுற்றுலாத் துறைக்கும் பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், இவ்வாறு ஏற்படும் கட்டுப்பாடுகளில் மாற்றங்களை செய்யவும் ஆராய்கின்றனர் என்றார்.