இலங்கையில் பொதுமக்கள் அடிப்படை உணவுகளுக்கே கஷ்டப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானிய உணவுகள் நாட்டின் பொருளாதாரச் சமத்துவக் குறைபாடுகளை தெளிவாக வெளிப்படுத்துகிறது என சமூக நீதிக்கான வழிகாட்டி இரவீ ஆனந்தராஜா அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஒரு சாதாரண குடிமகன் ஒரு நாளில் காலை உணவுக்காக ரூ. 250, மதிய உணவுக்காக ரூ. 600, மற்றும் தேநீருக்காக ரூ. 125 செலவிட வேண்டிய சூழல் உள்ளது. இது ஒருநாளின் அடிப்படை உணவுக்கே ரூ. 975 ஆகிறது” எனக்குறிப்பிட்ட அவர், சமீபத்தில் நாடாளுமன்ற உணவக கட்டணங்களை உயர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டாலும், அவை பொதுமக்கள் செலவுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
“600 ரூபாயாக உயர்த்தப்பட்ட காலை உணவு, 1200 ரூபாயாக உயர்த்தப்பட்ட மதிய உணவு, மற்றும் 200 ரூபாயாக உயர்த்தப்பட்ட தேநீர் கட்டணங்களும், மக்களின் உணவுக்கான செலவுகளுக்கு அருகே கூட வரவில்லை,” என இரவீ ஆனந்தராஜா தெரிவித்தார்.
மேலும், இந்த இடைவெளி அரசியல் தலைவர்களின் பொறுப்புத் தன்மை மற்றும் சமத்துவ உணர்வுகளைப் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. “நாடு தழுவிய பொருளாதார சிக்கல்களை சமாளிக்க, அரசியல் தலைவர்கள் மக்களின் போராட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்களுடன் உண்மையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என அவர் வலியுறுத்தினார்.
மக்களின் உணவுக்கட்டணங்களை குறைக்கும் திட்டங்களை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவம் ஏற்படும் என அவர் கூறினார். “பொதுமக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் நடைமுறைகள் மட்டுமே நாட்டை திருத்தத்தை நோக்கி நகர்த்த உதவும்,” என இரவீ ஆனந்தராஜா தனது கருத்தைத் தெரிவித்தார்.