திருகோணமலை பிரதேசத்தில் பணியாற்றும் புகையிரதத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புகையிரதத்தில் இடம்பெறும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு ஊழல் தொடர்பான முறைப்பாட்டிற்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைதான நபரிடமிருந்து 92 இலத்திரனியல் பற்றுச் சீட்டுகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர், இந்த சீட்டுகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், பிற சுற்றுலாப் பயணிகளுக்கும் அதிக விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், மாத்தளையில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி குற்ற விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளுக்கு பிறகு, மற்றொரு நபர் 29 இலத்திரனியல் பற்றுச் சீட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 131,000 ரூபாய் பணம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.