படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19வது ஆண்டு நினைவு நாள் இன்று (24) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு திருகோணமலை உவர்மலை லோவர் வீதியில் (ஆளுநர் செயலக வீதி) உள்ள உவர்மலை பூங்காவில் மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சுகிர்தராஜனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது. சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட அதே வீதியில், ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால், தமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையில், வேண்டும்! வேண்டும்! நீதி வேண்டும்!, சுகிர்தராஜன் படுகொலைக்கு! நீதி வேண்டும்!, வடக்கு – கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளக்கு நீதி வேண்டும்!, எங்கே! எங்கே! ஊடக சுதந்திரம் எங்கே!, அனுர அரசே! எமக்கு நீதி வேண்டும் என கோசமிட்டவாறும், பதாகைகளை சுமந்தவாறும் பங்குகொண்ட ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை துறைமுகத்தில் பணியாற்றிய சுகிர்தராஜன், தனது தொழில் நிமித்தமாக திருமலையில் தங்கியிருந்ததோடு ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வந்தார். 2006ம் ஆண்டு ஜனவரி 24ம் திகதி, காலையில் பணிக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்த போது, ஆளுநர் செயலகம் அருகில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்டார்.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்ததன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார்.
குறிப்பாக குறித்த அம்மாணவர்களின் இறப்புக்கு கைக் குண்டுத் தாக்குதலே காரணம் எனக் கூறி விசாரணையை திசைதிருப்ப முயற்சி செய்த நேரத்தில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் அவர்கள் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் சூட்டுக் காயங்களை நுட்பமாகப் படமெடுத்து குறித்த மாணவர்கள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளனர்.அவர்களின் தலையிலுள்ள காயங்கள் கைக்குண்டுத் தாக்குதலால் ஏற்பட்டவை அல்ல என்றும் அவை துப்பாக்கி குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டவை என்றும் உலகிற்கு வெளிக்காட்டியிருந்தார்.
மட்டக்களப்பில் பிறந்த சுகிர்தராஜன், மிதுசா (23) மற்றும் சதுர்சன் (21) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 36 வயதில், அவரது உயிரிழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி தமிழ் ஊடகவியலாளர்கள் சமூகத்திற்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது