திருகோணமலையின் அதிகளவான தமிழ் மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமிப்பதற்கு மக்கள் மட்டத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் பொழுது, மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கு பிரதேச சபையின் செயலாளர் காணப்படுகின்றார். ஆனால் அதிக அளவு தமிழ் மொழி பேசும் மக்கள் காணப்படுகின்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் ஒரு சிங்களவரை கொண்டு வந்து செயலாளராக நியமிக்க வேண்டிய தேவை என்ன? என கேள்வி எழுப்புகின்றார். இதன் காரணமாக தேவையற்ற இனமுருகலை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றார்.
மேலும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு செயலாளராக நியமிக்க கூடிய தகைமையுடைய பல தமிழர்கள் காணப்படும் நிலையில் சிங்களவர் ஒருவரை நியமிப்பதற்கு தற்போதைய அரசு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் முயற்சிகள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன் பின்னணி உள்ளூராட்சி தேர்தலை குறிவைத்தா இடம் பெறுகின்றது என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகர சபை, வெருகல் பிரதேச சபை மற்றும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகியவை மாத்திரமே தமிழர்களின் கையில் இருந்த பிரதேச சபைகளாக காணப்பட்டு வந்த நிலையில், இவ்வாறான முயற்சிகள் மூலம் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கைநழுவி போகக் கூடிய வாய்ப்பு அதிகரித்து வருவதாகவும் விமர்சனம் ஏற்பட்டுள்ளது.