முகநூல் கணக்கொன்றை ஹேக் செய்து, அதன்மூலம் உறவினர் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், ஹேக் செய்த முகநூல் கணக்கின் மூலம் தன்னை உறவினராக காட்டி, மூன்று வேளைகளில் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து மொத்தம் 7,00,000 ரூபாயை மோசடி செய்துள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி முறைப்பாடு கிடைத்ததையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. முகநூல் கணக்குகள் மற்றும் பண பரிவர்த்தனைகளை ஆராய்ந்தபோது, நபரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கட்டாரில் இருந்து இலங்கைக்கு திரும்பியதை ஒட்டி, குடிவரவுத் தடை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, நேற்று (21) அவர் நாட்டிற்கு வந்தவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
இக்குற்றச்செயலுக்கு தொடர்புடைய நபர் மொன்னேகுளம் பகுதியில் வசித்தவர் என்பதும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் மேலும் தொடர்ந்த வண்ணம், பொது மக்களுக்கு தங்களது சமூக வலைதள கணக்குகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், மோசடிகளில் ஈடுபடுபவர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்கவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.