பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், அதன் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜின் தலைமையில் நேற்று (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருமண வயது எல்லையை திருத்துவது தொடர்பாக முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திரானி கிரிஎல்லே, சமன்மலி குணசிங்கம் ஆகியோரும், தீப்தி வாசலகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, ஒஷானி உமங்கா, (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவெல், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர என பல முக்கியமான பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் தனித்தொழிலாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தற்போதைய திருமண சட்டங்களில் காணப்படும் வயது எல்லைகளை ஒருங்கிணைத்து, பொதுவான திருமண வயதினை நிர்ணயிக்கவேண்டியதின் அவசியம் இதன் போது விவாதிக்கப்பட்டது. இது தொடர்பில் சிவில் சமூகத்துடன் தொடர்புடைய தரப்பினரின் கருத்துக்களைப் பெற்று, இறுதிப் பரிந்துரைகளை உருவாக்குவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டது.
“பிள்ளை” என்ற சொல்லுக்கான சரியான வரைவிலக்கணம் உருவாக்கப்படவேண்டும் என்றும், அதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒன்றியத்தினர் கவனம் செலுத்தினர்.
பெண்கள் மேம்பாடு தொடர்பான கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை மீண்டும் ஆராய்ந்து, அவற்றை புதுப்பித்து சட்டமாக்க தீர்மானிக்கப்பட்டது.
ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து 10வது பாராளுமன்றத்தில் முன்னேறுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் உறுப்பினர்களின் கருத்துகள் உள்வாங்கப்படும் என்றும் இதில் அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்கள், இலங்கையில் திருமண வயது மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.