25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இந்தியா

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

சென்னையின் 2-வது விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பரந்தூர் போராட்ட குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகள், விவசாய நிலங்களை அழிப்பதை ஏற்க முடியாது. இதற்காக சட்ட நடவடிக்கைகள் தேவைப்பட்டாலும் எடுப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

சென்னையின் 2வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள 13 கிராமங்களில் இருந்து 5,300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 900 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், போராடும் மக்களை சந்திக்கப்போவதாகவும் விஜய் அறிவித்தார்.

ஏகனாபுரம் அம்பேத்கர் திடல் அருகே உள்ள இடத்தில் கூட்டம் நடத்த போராட்ட குழுவினர் முடிவுசெய்தனர். ஆனால், பரந்தூர் அருகே உள்ள திருமண மண்டபத்தில் கூட்டத்தை நடத்துமாறு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்காத போராட்ட குழுவினர், அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் கூட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். பரந்தூர் திருமண மண்டபத்துக்கு அருகே உள்ள திடலில் கூட்டம் நடத்துமாறு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த திடலில் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில், பரந்தூர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் தவிர வெளி நபர்கள் உள்ளே வரக் கூடாது என போலீஸார் நேற்று தடை விதித்தனர்.

போலீஸார் குவிப்பு: காஞ்சிபுரத்தில் இருந்து பரந்தூர் நுழையும் பொன்னேரிக்கரை பகுதியில் உள்ளூர் மக்கள்கூட, தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் கிராம மக்கள் மற்றும் தவெக கட்சியினர் அப்பகுதியில் குவியத் தொடங்கினர். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரும் திரண்டனர்.

காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று போலீஸார் நிபந்தனை விதித்தனர். இதையடுத்து, காலை 10 மணி அளவில் விஜய் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டிருந்ததால், சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு விஜய் வந்துசேர்வதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் தாமதமாக, பிற்பகல் 12.40 மணி அளவில் அவர் அங்கு வந்து சேர்ந்தார்.

பின்னர், அவர் பேசியதாவது: பரந்தூரில் விவசாயிகளிடம் இருந்து எனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளேன். போராடும் விவசாயிகளுக்கு நானும், எனது கட்சியினரும் எப்போதும் துணை நிற்போம். மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலை அமைவதை தமிழக அரசு எதிர்த்ததை வரவேற்கிறேன். அதே நிலைப்பாட்டை பரந்தூர் விவகாரத்தில் அரசு ஏன் எடுக்கவில்லை. பரந்தூர் விவகாரத்தில் விமான நிலையத்தையும் தாண்டி அவர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது.

நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விமான நிலையம் வேண்டாம் என்றும் கூறவில்லை. பரந்தூரில் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். வேறு ஏதேனும் குறைவான பாதிப்பு உள்ள இடத்தில் இந்த விமான நிலையத்தை அமைக்கலாம். வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகள், விவசாய நிலங்களை அழிப்பதை ஏற்க முடியாது.

சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் அழிக்கப்பட்டதால் தான் சென்னையில் சிறு மழைக்கே வெள்ளம் வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்டால், அது சென்னைக்கே பேராபத்தாக முடியும். ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள திடலில் மக்களை சந்திக்கவே திட்டமிட்டேன். போலீஸார் அனுமதி தரவில்லை. நான் ஏன் அந்த ஊருக்கு செல்லக்கூடாது என்பது புரியவில்லை. உங்களுடன் கூடுதல் நேரம் இருக்க வேண்டும் என்றுதான் விருப்பம். இப்போது சூழல் சரியில்லை. மீண்டும் ஏகனாபுரம் வந்து உங்களை சந்திக்கிறேன். பரந்தூர் மக்களுக்காக சட்ட நடவடிக்கைகள் தேவைப்பட்டாலும் எடுப்பேன். இவ்வாறு விஜய் பேசினார். பிற்பகல் 1 மணிக்குள் கூட்டத்தை முடிக்குமாறு போலீஸார் கூறியதால், 10 நிமிடத்தில் அவர் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment