மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், நாட்டில் ஊழல் அரசியலை முழுமையாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
களுத்துறை கட்டுகுருந்த பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று (19) உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி தனது பதவியேற்பு நிகழ்வின் பின்னர், நாட்டை முன்னேற்றவும், நல்லாட்சியை நிலைநாட்டவும் தனது அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “தற்போது அமைச்சரவையில் 21 அமைச்சர்களுடன் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். எம்.பி.க்களுக்கு தேவையான சலுகைகளை வழங்கி, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த உறுதி செய்கிறோம். கடந்த காலங்களில் இதே களுத்துறையில் அமைச்சுப் பதவிகள் மற்றும் அதிகாரப்பகிர்வில் பெரும் குழப்பங்கள் இருந்தன. மனைவி, உறவினர்கள் உள்ளிட்டோருக்குப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, செயல்திறனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
அதன் அடிப்படையில், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், புதிய அரசாங்கம் ஊழலற்ற ஆட்சிக்காக செயல்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“எந்த ஒரு அமைச்சருக்கும் தனிப்பட்ட கார்களோ, அதிக அளவிலான சலுகைகளோ வழங்கப்படவில்லை. இன்று அனைத்து அமைச்சர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக எளிமையாகவும் கடினமாகவும் உழைத்து வருகிறார்கள். அதற்காக நாங்கள் ஒருங்கிணைந்த ஆட்சியை முன்னெடுக்கின்றோம்,” என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.