இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மஹா கும்பமேளாவில் இன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமாகத் திகழும் இந்த நிகழ்வு, பௌர்ணமியையொட்டி கடந்த 13.01.2025 அன்று தொடங்கியுள்ள நிலையில், வரும் மகா சிவராத்திரி திருநாளான பெப்ரவரி 26ம் திகதி வரை 45 நாட்கள் நடைபெறவுள்ளதாக கணிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் 6ம் நாளான இன்று, திரளான பக்தர்கள் கலந்து கொண்டபோது, கும்பமேளா நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் சிலிண்டர் வெடித்து தீ பரவியதையடுத்து, 5 பகுதிகளில் தீ விழுந்து, அது மேலும் பல கூடாரங்களுக்கு பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தால் கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.
தீ பரவுவதாக தகவல் கிடைத்தவுடன், 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகை பெரிதாக பரவியதால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டதோடு,. சாஸ்திரி பாலம் மற்றும் ரயில்வே பாலமிடையேயுள்ள பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அருகில் உள்ள கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது, 20 முதல் 25 வரையான கூடாரங்கள் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சிலிண்டர்கள் வெடித்து தீ விரைவாக பரவுவதால், தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரும் பேரிடர் மீட்புப் படையினரும், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை