அரசு சேவையை வலுப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 7,50,000 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிரடி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
அவரின் கருத்துப்படி, அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மேலும், அரசின் தற்போதைய நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கலுக்கான சூழலையும் உருவாக்கியுள்ளன.
“அரசாங்கம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தாலும், அதன் திட்டம் எது என்பது இன்னும் தெளிவாக இல்லை. இந்த நிலைமை அரசியல் வேட்டையை குறிக்கின்றது,” என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள புதிய அலுவலக திறப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த அலுவலகம், அரசியல் அடக்குமுறையுடன் போராடும் தலைவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக திறக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நாமல் ராஜபக்ச அரசு இயந்திரத்தில் நடக்கும் அரசியல் வேட்டைகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு எதிராக கடுமையாக பேசியதோடு, இந்த அரசாங்கம் தனது திறமையின்மையைக் கொண்டு மக்களிடம் எதிர்மறை பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. ஊடகங்களில், அரசியல் அடக்குமுறைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் மூலம் அதற்கு எதிராக நாம் போராடுகிறோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஊடக அடக்குமுறை நிலவுகிற நிலையில், “அடுத்த கட்டம் அரசியல் அடக்குமுறை,” என்ற நாமல் ராஜபக்ச, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் நம்மைத் தடுக்க முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.