வறுமை மாணவர்களின் கல்விக்கு ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16.01.2025) நடைபெற்ற நிகழ்வில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவையுடைய 217 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் சா. சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர், கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியதோடு, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “கல்வியில்லாதவர் இரண்டு கண்களும் இல்லாதவரை ஒத்தவர். வறுமை எந்தவொரு மாணவரின் கல்விக்கும் தடையாக இருக்கக்கூடாது” என வலியுறுத்தினார்.
மேலும் “மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், வறுமையை ஒழிக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் மாணவர்களுக்கு உதவுவது எங்கள் பணி எனவும், கடின உழைப்பின் மூலம் வெற்றியடையலாம், உங்களால் முடியும் என்பதை நம்பி முயற்சி செய்யுங்கள் எனவும் மாணவர்களுக்கு வலியுறுத்தி கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில், பிரதேச செயலர் சுதர்சன் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், வறுமையை ஒழிக்கும் அவரது செயல்திறனும் ஆளுநரால் பாராட்டப்பட்டது. “கல்வியில் முன்னேறி சமூகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும்” என அவர் மாணவர்களுக்குத் தெரிவித்தார்.
வறுமை நிலையிலும் ஒழுக்கத்துடன் உயர்ந்த நிலையை அடைய மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழிகாட்டியாக அமையும் என்பதில் விழா பங்கேற்பாளர்கள் உறுதியளித்தனர்.