ஜப்பானில் தனிமையில் வாழும் மக்களுக்கு வாடகை நண்பராக சேவையளிக்கும் ஜோஷி மோரி மோட்டோ என்ற இளைஞர், ஆண்டுக்கு இந்திய மதிப்பில் சுமார் 69 இலட்சம் ரூபாய் வருமானத்தைப் பெறுகிறார்.
2018ம் ஆண்டில், பணியிலிருந்து நீக்கப்பட்ட ஜோஷி, வேறு வேலை கிடைக்காத நிலையில் தனிமையில் இருப்பவர்களுக்குத் துணையாக வாடகை நண்பராகச் செல்லத் தொடங்கினார். இந்த சேவையின் மூலம் அவர் மக்களிடையே புகழ்பெற்று, மிகுந்த வருமானத்தையும் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜோஷி வாடிக்கையாளர்களுடன் உரையாடுதல், வீட்டு வேலை செய்யும் போது மனத் துணையாக இருப்பது, வீடியோ அழைப்புகளில் தொடர்பு கொள்ளுதல், இசை நிகழ்ச்சிகளுக்கு நண்பராகச் செல்லுதல் போன்ற சேவைகளை மேற்கொள்கிறார். ஆனால் அவர் பாலியல் அல்லது காதல் தொடர்பான எந்த சேவையிலும் ஈடுபடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் அவரிடம் வினவியபோது, “கடினமான சூழல்களைச் சந்திக்கிறேன், அதிக வெயிலிலும், கடுமையான குளிரிலும் பல மணிநேரம் நிற்பது போன்று. இரண்டு முதல் மூன்று மணிநேர சேவைக்கு, இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 வரை கட்டணம் பெறுகிறேன்” என்றார்.
அவரின் இந்த முயற்சி, தனிமையில் உள்ளவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைத்து உற்சாகத்தை அதிகரிக்கும் சேவையாக பார்க்கப்படுகிறதோடு, அவரின் திறனும், உண்மையும் அவருக்கு மக்களிடையே உயர்ந்த மதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.