கண்டி மாவட்டம் கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட 19 வயதான பாடசாலை மாணவி அம்பாறை பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் இன்று(13) காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து மாணவி மீட்கப்பட்டதுடன், அவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் கைது செய்யப்பட்டு அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ கடந்த சனிக்கிழமை (11) அன்று பகிரப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட மாணவியின் தந்தையின் சகோதரியின் மகனான 30 வயதானவரே கடத்தலில் ஈடுபட்டார்.
மாணவிக்கும், சந்தேகநபருக்கும் திருமணம் செய்து வைப்பதென இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். எனினும், பின்னர் மாணவியின் தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதை தொடர்ந்தே, மாணவி கடத்தப்பட்டார்.
-பாறுக் ஷிஹான்-