விடிவி கணேஷின் பேச்சால் ‘விஜய் 69’ படம் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பது உறுதியாகி இருக்கிறது.
’சங்கராந்திக்கு வஸ்துனாம்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வுக்கு நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துக் கொண்டார்கள். இதில் விடிவி கணேஷ் பேசியது தான் ‘விஜய் 69’ படக்குழுவுக்கு பெரும் தலைவலியாக வந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் விடிவி கணேஷ் பேசும்போது, “‘பகவந்த் கேசரி’ படத்தினை விஜய் சார் 5 முறை பார்த்தார். அனில் ரவிப்புடி இயக்குவதற்கு கேட்டார். இவரோ ரீமேக் செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவரை இயக்க 4-5 பெரிய இயக்குநர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், அவரோ அனில் ரவிப்புடி இயக்கட்டும் என்றார்” என்று பேசினார்.
விடிவி கணேஷின் பேச்சை இடைமறித்து அந்தச் சமயத்தில் நடந்தது என்ன என்பதை பேச முற்பட்டார் இயக்குநர் அனில் ரவிப்புடி. ஆனால், தொடர்ச்சியாக விடிவி கணேஷ் பேசினார். பின்பு அனில் ரவிப்புடி பேசும்போது, “விடிவி கணேஷ் சாரை ரொம்ப பிடிக்கும். ‘விஜய் 69’ படம் குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. அது குறித்து இங்கு பேசுவது சரியாக இருக்காது.
தமிழில் பெரிய சூப்பர் ஸ்டார் விஜய் சார். அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவருடன் நேரம் ஒத்துவராத காரணத்தினால் மட்டுமே படம் பண்ண முடியவில்லை. அந்தச் சமயத்தில் நடந்த விஷயங்கள் வேறு, பேச்சுவார்த்தை வேறு. நான் சந்தித்த நடிகர்களில் சிறந்த நடிகர் விஜய் சார் தான். ‘வாரிசு’ படத்தில் கூட 2-3 காட்சிகளில் பணிபுரிந்தேன்.” என்று பேசி முடித்தார் அனில் ரவிப்புடி.
இந்த இரண்டு வீடியோ பதிவுகளுமே இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இதை வைத்து ‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் ‘விஜய் 69’ படம் என்பது உறுதியாகி இருக்கிறது.
தமிழுக்கு ஏற்றவகையில் கதையை மாற்றி உருவாக்கி வருகிறார்கள். ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.