நிலாவெளி அடம்பொடை கிராம வீதியானது சுமார் 5 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில், தற்போது பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீதியை 150 முதல் 200 குடும்பங்கள் தினமும் பயன்படுத்தும் நிலையிலும், அதன் பராமரிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததன் விளைவாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மின்குமிழ் ஏதும் இல்லாத காரணத்தால் இவ் வீதியால் இரவில் பயணம் செய்வது பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. மேலும், குப்பைகள் கொட்டும் இடமாக இவ் வீதி மாறியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த வீதி நிலாவளி 1ம், 2ம் வட்டார மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய பாதையாக காணப்படுகிறது. குறிப்பாக பாடசாலைக்கு செல்லும் குழந்தைகள் முதல் தொழிலுக்கு செல்லும் மக்கள் வரை பலரும் பயன்படுத்தும் இவ் வீதியின் பாதிப்பு அவர்களின் தினசரி வாழ்வில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது,
இது மட்டுமின்றி, வீதியின் அருகில் உள்ள கான்கள் உடைந்த நிலையில் பாதுகாப்பின்றி காணப்படுகின்றன. மாரி காலங்களில் மட்டும் பொதுமக்களே தூர்வாரும் நிலைமை நிலவுவதாகவும், மற்ற நாட்களில் அந்த கான்கள் அசுத்தமடைந்த நிலையிலே காணப்படுவதாயும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள், குறிப்பிட்ட பகுதியில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பிரதேச சபையிடமும், வீதி அபிவிருத்தி நிறுவனங்களிடமும் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வீதியை புனரமைத்து பாதுகாப்பு சாலையாக மாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.