திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரநகர் பகுதியில், சமீபத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான சீரற்ற காலநிலைகளால் கடல் சீற்றம் அதிகரித்து, பல்வேறு கட்டிடங்கள் மற்றும் இயற்கை வளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முன்பு இல்லாத அளவிற்கு கடல் சீற்றம் உருவாகி, கட்டிடங்களின் அத்திவாரங்கள் அரிக்கப்பட்டு, அவை உடையும் நிலையில் உள்ளன. குறிப்பாக, வீடுகளின் பின்புறங்களிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் நிலைமையும் உருவாகியுள்ளது.
வீரநகரில் வசிக்கும் மக்கள், கடல் உக்கிரத்தால் இரவு நேரங்களில் வீடுகளில் நிம்மதியாக வசிப்பதற்கு இயலுவதில்லை எனக் கூறுகின்றனர். குறிப்பாக, கடலின் உக்கிரமான ஒலிகளும், அச்சுறுத்தலான சூழல்களும் அவர்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதித்துள்ளன.
இந்தக் கடல் அரிப்பு மற்றும் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்க, தொடர்புடைய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.