மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை, சுமார் 2000-க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு இலவச இருதய சிகிச்சை சேவைகளை வழங்கி வருவதில் முன்னணியில் உள்ளது. இந்த வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதய மருத்துவப் பிரிவு மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலைகளின் ஆதரவைப் பயன்படுத்தி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இருதய மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக தனிப்பட்ட சத்திரசிகிச்சை கூடம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கடந்த 04.01.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதை வைத்தியசாலையின் நிறுவனர் சற்குரு மதுசூதனன் சாய் அவர்கள் தொடங்கிவைத்தார்.
திறப்புவிழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரவிந்த டி சில்வா, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், அஜந்த மென்டிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். உடன், வைத்தியசாலையின் இலங்கை தலைமை அதிகாரி பென்னி ஜெயவர்த்தன, சுகாதார வைத்திய அதிகாரி இரா. முரளீஸ்வரன், மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக, இருதய மாற்று சிகிச்சைகள் இப்பகுதியில் நிகழ்த்தப்படுகின்றன. இதற்கு முன், கிழக்கு மாகாண மக்கள் யாழ்ப்பாணம் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்தது. புதிய சிகிச்சை வசதியால், நோயாளிகளுக்கு துரிதமாக மருத்துவ சேவைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வு மட்டக்களப்பின் மருத்துவ வரலாற்றில் புதிய அத்தியாயத்தை அமைத்துள்ளது