கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீர்த்தேக்கத்தின் கரை உடைவதற்கான அவதானம் தற்போது தொடர்ந்தும் நிலவி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் தெற்கு மதகிற்குச் செல்வதற்காக கட்டப்பட்ட மண் அணையில் கசிவு இருப்பது நேற்று (10) காலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மதகின் ஆழம் சுமார் 27 அடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள நீரின் அழுத்தம் அதிகரித்து கசிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நீர்ப்பாசனத் திணைக்களம், இராணுவம், பொலிஸ் மற்றும் கிராமவாசிகளின் உதவியுடன் உடனடியாக நீர்க்கசிவை அடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு, மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி, பிற்பகலுக்கு அந்த கசிவை அடைக்க முடிந்தது.
என்றாலும், கரை உடைந்த இடத்தில் மீண்டும் நீர்க்கசிவு ஏற்பட்டு, தற்போது நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து, நீர்த்தேக்கத்தின் கரை முழுமையாக உடைந்தால், அந்த சுற்றுப்புற கிராமங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
மேலும், இந்த கசிவினால் 30 குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளன.
இந்த நீர்க்கசிவை முறையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.