நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரு இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள் மீது, கைது செய்யும் போது, கடற்படை உத்தியோகத்தர்களை தாக்கி அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தது, மேலும் கடற்படை படகை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே, அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனடிப்படையில், பருத்தித்துறை நீதிமன்றத்தில் நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை வழக்கை விசாரித்து, கடந்த நவம்பர் 27ம் திகதி, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.
இருந்த போதிலும், கடற்படை அதிகாரிகளைத் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் காரணமாக, பன்னிரு மீனவர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மீண்டும் இவ் வழக்கு நேற்று (08.01.2025) பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கடும்பரிசீலனைக்குப் பின் நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை இந்த வழக்கு தொடர்பில் படகினை ஓட்டியவருக்கு எட்டு மாத கடூழிய சிறைத் தண்டனையம், ஏனைய பதினொரு மீனவர்களுக்கு ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனையும், வழங்கியதோடு, இந்த தண்டனைகள் பத்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டது. அதே நேரத்தில், மீன்பிடி படகை அரசுடமையாக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.