சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்தில் தெரிவித்துள்ளார். 38 வயதான அவர் கடைசியாக கடந்த 2022இல் பங்களாதேஸ் அணிக்கு எதிரான ரி20 போட்டியில் விளையாடி இருந்தார்.
13 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 198 ஒருநாள் போட்டிகள், 122 ரி20 மற்றும் 47 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 13,463 ரன்கள் எடுத்துள்ளார். நியூஸிலாந்து அணிக்காக சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக கப்தில் அறியப்படுகிறார். அதில் மட்டும் 3,531 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 7,346 ரன்கள் எடுத்துள்ளார். 39 அரை சதங்கள் மற்றும் 18 சதங்களை ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார். கடந்த 2015 உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் வெலிங்டன் மைதானத்தில் ஆட்டமிழக்காமல் 237 ரன்களை எடுத்திருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் அது. மேலும், உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் பதிவு செய்த அதிகபட்ச ரன்களாகவும் அது அறியப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் ரி20 லீக் தொடர்களில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சக அணி வீரர்கள், தன் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.