தடை செய்யப்பட்ட தரமற்ற மீன்பிடி வலைகளை வழங்கியதோடு, அதற்கு அதிக வரி விதித்ததாக கூறி, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக மீனவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதனால், பயனாளிகள் வழங்கப்பட்ட வலைகளை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து, உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 41 பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகள் வழங்குவதற்காக ரூ.8,50,000 ஒதுக்கப்பட்டு, இந்த நிதியின் கீழ், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் வலைகளை கொள்வனவு செய்திருந்தது.
இதன்படி, வழங்கப்பட்ட வலைகள் தரக்குறைவானவை எனவும், அவற்றில் தங்கூசி கலந்திருப்பதால், மீன்பிடிக்க இவை தடை செய்யப்பட்டவை எனவும் பயனாளிகள் தெரிவித்திருந்தனர். தரம் கொண்ட கப்பல் பீஸ் எனப்படும் வலையை மட்டுமே பிரதேச செயலகமிடம் தெரிவித்திருந்ததும் அவர்கள் பாவனைக்குதவாத தரமற்ற வலைகளையே தந்துள்ளனர் என குற்றச்சாட்டியுள்ளனர்.
வலையின் பெறுமதி அதிகமாக இருப்பதோடு, 18% தனி வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஊழலுக்கு வழிவகுக்கிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, குறித்த வலையை 41 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக சென்றிருந்தவேளை, பயனாளிகள் குறித்த வலை வேண்டாமென்றும், தரம் கொண்ட வலையை விட தரமற்ற இந்த வலையின் பெறுமதி அதிகமாக இருப்பதாகவும், இந்த வலையை பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை எனவும் கூறியிருந்தனர் எனவும் தெரிவித்தார்.
பயனாளிகள் தமக்கு குறித்த வலை வேண்டாமென கூறி நிராகரித்ததாக தெரிவித்தார் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நிதியை கையளித்தவர்கள் என்ற முறையில் பயனாளிகளின் குற்றச்சாட்டிற்கு எமக்கான உரிய பதிலை தர வேண்டுமென மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உடுத்துறை பிரதேச மீனவர்கள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தடை செய்யப்பட்ட, தரமற்ற மீன்பிடி வலைகளை வழங்கியுள்ளதாகவும், பயன்பாட்டிற்கு உதவாத தங்கூசி கலந்த வலையை வழங்கியுள்ளதாகவும், உரிய தரம் கொண்ட “கப்பல் பீஸ்” வலையின் விலை ரூ.16,400 என்றால், வழங்கப்பட்ட தரமற்ற வலைகளின் விலை அதிகமாகும் எனவும், முறைகேடாக இதற்கு 18% தனி வரி விதிக்கப்பட்டுள்ளது எனவும் கண்டனம் தெரிவித்த்துள்ளனர்.
மேலும், தமக்கு தரமான வலைகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வழங்கப்பட்ட தரமற்ற வலைகளை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கூட்டுறவு சங்க தலைவர் கிட்டு மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் ஆகியோர், இந்த செயல் ஊழலாக காணப்படுவதுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.