கிழக்கு மாகாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (07.01.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கொழும்பு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடவுச்சீட்டு அலுவலகங்கள் காணப்படுவதாகவும், கிழக்கு மாகாணத்தில் இவ்வருடம் வரை அதற்கான வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளதென்றும் குறிப்பிட்டார்.
“கிழக்கு மாகாணத்தில் அலுவலகமொன்று இல்லாத காரணத்தினால், அப்பகுதி மக்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொழும்புக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் நேரமும் பணமும் வீணாகின்றன,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் “கிழக்கு மாகாணம் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பகுதியாதலால், அங்கு கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்படுவது அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார்.
இதன்பொருட்டு, கிழக்கு மாகாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது கோரிக்கையை முன்வைத்தார்.