Pagetamil
இலங்கை கட்டுரை

அரசியல் தீர்வைப் பற்றிப் பற்றிய கதை (விடல்)கள்

– கருணாகரன்

அரசியல் தீர்வைப் பற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தம்மைத் தயார்ப்படுத்துவதாக ஒரு தோற்றப்பாட்டினை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் உருவாக்க முயற்சிக்கின்றனர். இது தொடர்பாக இவர்கள் இருவரும் மாறி மாறி அறிவிப்புகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இடையில் இருவரும் சந்தித்துப் பேசியுமுள்ளனர். இதற்கான நெருக்கத்தைக் கா(கூ)ட்டும் விதமாக யாழ்ப்பாணத்தின் நடந்த குமார் பொன்னம்பலத்தின் நினைவு கூரல் நிகழ்விலும் சிறிதரன் கலந்து கொண்டிருக்கிறார்.

அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுவதற்குத் தமிழ்க்கட்சிகள் பொதுநிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார் சிறிதரன். அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுவதற்காக தமிழ்க் கட்சிகளை அழைத்திருக்கிறார் கஜேந்திரகுமார். இதற்கான உரையாடல்கள் ஜனவரி 25 இல் நடக்குமென்று கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்திருக்கிறார்.

உண்மையாகவே அரசியல் தீர்வு தொடர்பான அக்கறையோடுதான் இவர்கள் இருவரும் செயற்படுகிறார்களா? என்ற கேள்வி பலமாக எழுகிறது. ஏனென்றால் அதற்குச் சில காரணங்களுண்டு.

1. NPP அரசாங்கம் இன்னும் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையைப் பற்றிப் பேசவே இல்லை. இப்போதைக்கு அதற்கான சாத்தியமிருப்பதாகவும் தெரியவில்லை. அதற்கு முன்பாக அது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றியே சிந்திக்கும். அது கூட இந்த ஆண்டு (2025 ) இல் சாத்தியப்படும் என்று கூறமுடியாதுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசியலமைப்புக்கூடாக முன்வைப்பதே – சாத்தியப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம். அது சாத்தியப்படுமா இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், இப்படித்தான் அரசாங்கம் சிந்திக்கிறது.

இந்த நிலையில் அரசியல் தீர்வைப்பற்றிப் பேசுவதற்காக ஆயத்தப்படுத்துதல் என்பது சந்தேகத்துக்கும் சிரிப்புக்குமுரியதாகும்.

2. சிறிதரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் ஒரு பொது எதிரி உண்டு. அது சுமந்திரன். இதைப்பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே தங்களுடைய பொது எதிரிக்கு எதிராக இருவரும் ஒன்றிணைய முற்படுகின்றனர். அதனுடைய வெளிப்பாடும் ஆயத்தங்களுமே இந்த அரசியல் தீர்வைப் பற்றிப் பற்றிய கதை (விடல்)கள். இந்தப் பொதுஎதிரிக்கு (சுமந்திரனுக்கு) எதிராக ஏன் இவ்வளவு அவசரமாக இருவரும் கைகோர்க்க முற்படுகிறார்கள் என்றால், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்புக்கு அல்லது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு சுமந்திரன் முதன்மையான பங்களிப்பாளராக இருப்பார் எனக் கருதப்படுகிறது. இதற்கான சமிக்ஞைகளை அநுர குமார திசநாயக்க தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும் புலமைத்துவம்சார் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு விடயத்தில் சுமந்திரனுடைய பங்களிப்புகள் இருக்க வேண்டும் என அரசாங்கத் தரப்பு விரும்புகிறது. சற்றுக் கவனிக்கவும்: இது அரசியலமைப்பின்போது அதில் பங்கேற்பதாக இல்லை. பங்களிப்பாக இருக்கும் என்பதை. பங்கேற்பது என்பது அரசியல் உறுப்புரிமை (பாராளுமன்ற உறுப்பினர் அல்லது கட்சித் தலைவர்) என்ற அடிப்படையில் அமையக் கூடியது. பங்களிப்பு என்பது அவ்வாறானதல்ல. அது இத்தகைய உறுப்புரிமையோ தகுதி நிலையோ இல்லாமல், புலமைத்துவ அடிப்படையில் அமைவது. ஆகவே தேர்தலில் சுமந்திரன் தோற்றுப்போனாலும் அரசியல் அரங்கில் தோற்கடிக்க முடியாதவராகவே இருக்கிறார் என்ற பதற்றம்.

இத்தகைய வாய்ப்பையும் முக்கியத்துவத்தையும் சுமந்திரன் கொண்டிருப்பதால், அதைத் தவிர்க்குமுகமாகவே இந்த அவசரத்தைச் சிறிதரனும் சுமந்திரனும் காட்டுகின்றனர். அதாவது சுமந்திரனை நீங்கள் சேர்த்துக் கொண்டீர்களென்றால், அதனை நாம் எதிர்ப்போம் என்பதை அரசாங்கத்துக்குக் காட்ட முயற்சிப்பது. அதேவேளை, சுமந்திரனுடைய கொழும்புடனான இணக்கத்துக்குத் தாம் எதிர்ப்பாகவே இருக்கிறோம். சுமந்திரன் எப்போதும் கொழும்பின் ஆளாகவே இருக்கிறார் எனத் தமிழ் மக்களுக்குக் காட்டுவது. ஆக ஒரே அடியில் இரண்டு காய்களை விழுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

3. தமிழ் அரசியலில் பேசுபொருளாக எடுத்துக் கொள்வதற்கு இவர்களிடம் எந்தக் கையிருப்பும் இப்போதில்லை. காணாமலாக்கப்பட்டோர் விடயம் இவர்களுடைய கைகளை விட்டுப் போய் விட்டது. அப்படித்தான் அதைக் கையில் எடுத்தால், அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் உறவினர்களே அதைக் கண்டிக்கக் கூடிய சூழலே உண்டு. படை விலக்கல், போர்க்குற்றம் போன்றவையெல்லாம் சாத்தியப்படப்போவதில்லை. அதைப்பற்றிப் பேசினாலும் அதொன்றும் எடுபட வாய்ப்பில்லை. அப்படிப் பேசினால், அதைப் பகடியாகத்தான் சனங்கள் பார்ப்பர். அரசியற் கைதிகள் விடயத்தைக் கொஞ்சம் பேசிப்பார்க்கலாம் என்று முயற்சித்தால் அதுவும் பெரிதாக எடுபடப்போவதில்லை.

ஆகவே ஒரு மாற்று முயற்சியாக அரசியற் தீர்வுக்கான முன்னாயத்தங்களைப் பற்றிப் பேசிப் பார்க்கலாம் என்று முயற்சிக்கிறார்கள். அதற்கான ஊடகக் கவனம் தமிழ்ப்பரப்பில் இருப்பதால் சற்று ஊக்கமடைந்திருக்கிறார்கள். இனிக் கொஞ்ச நாட்களுக்கு இந்தப் ‘படங்காட்டல்‘ நிகழும். தமிழ்த்தேசியப் பரப்பில் மையங்கொண்டு செயற்படும் ஊடகங்களுக்கும் பயன்படுத்துவதற்கு இப்போதைக்கு வேறு எந்தப் பொருளும் இல்லை. ஆகவே தமிழ் ஊடகங்களும் இந்த இரண்டு கட்சியினருமாக (இரண்டு தரப்பும்) இணைந்து அரசியல் தீர்வு, அதற்கான வரைவுகள், அதைப்பற்றிய பேச்சுகள் என்று கொஞ்சக் காலத்துக்கு தங்களை ஓட்டிக் கொள்ள முயற்சிப்பது நடக்கும். அதாவது சனங்களின் காதில் துளையிட்டு பூவைச் செருகுவார்கள் –தலையில் எண்ணெய் தேய்ப்பார்கள்.

4. ‘புதிய அரசாங்கம் தமிழ் பேசும் மக்கள் விரும்பக்கூடிய (‘ஏற்கக் கூடிய தீர்வு‘ என்று இங்கே குறிப்பிடப்படவில்லை) தீர்வொன்றை முன்வைத்தாலும்….‘ என்ற அச்சம் சிறிதரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் உண்டு. அதாவது இவர்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாமலே, அரசியலமைப்புக்கூடாகவோ, அல்லது மாகாணசபைகளை இயங்க வைப்பதன் வழியாகவோ தீர்வைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பை இல்லாதொழித்து விடக்கூடும் என்ற அச்சம். அதைத் தடுப்பதற்கு அல்லது அதையிட்டு நெருக்கடி ஒன்றை ஏற்படுத்துவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர்.

அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலையில் இப்போது தமிழ்க்கட்சிகள் எதுவுமில்லை. தமிழ்ப் பகுதிகள் என்று சொல்லப்படும் இடங்களிலேயே தேசிய மக்கள் சக்திதான் வலுவானதாக உள்ளது. தமிழ்க்கட்சிகள் உதிரிகளாகச் சிதறிப்போயுள்ளன. இதற்கப்பால், இப்போதுள்ளதையும் விட கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபையின் நிர்வாகத்தையும் போர்ப்பாதிப்பு உண்டாக்கிய சாதகமான நிலைமையையும் கையில் வைத்திருந்தபோதே இந்தக் கட்சிகளால் – இந்தத் தலைவர்களால் – உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை. இப்போது பலவீன நிலையில் இருந்து கொண்டு எவ்வாறான அழுத்த்த்தை அரசாங்கத்தின் மீது உண்டாக்க முடியும். அதற்கப்பால், சர்வதேச, பிராந்தியச் செல்வாக்கைப் பயன்படுத்தக் கூடிய வல்லமையும் தமிழ்த்தரப்பிடம் இல்லை. எனவே இது ஒரு கற்பனைக் குதிரைச் சவாரிதான்.

5. தற்செயலாக ஒரு தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால் அல்லது அரசியலமைப்புக்கூடாக தீர்வுக்குக் கிட்டவான ஏற்பாடொன்றைச் செய்தால் தமது பிராந்திய அரசியலுக்கான (Regional politics) இடமற்றுப் போய்விடும். அதோடு எதிர்ப்பு அரசியலை (Counter politics) முன்னெடுக்கவும் முடியாமற் போய் விடும் என்ற அச்சம் தலையைப் பிய்க்கத் தொடங்கியுள்ளது. எனவே அதற்கு முன்னேற்பாடாக, தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வு வேறு. அது இதுதான் எனத் தாங்கள் சுடுகின்ற வடையைக் காட்ட முற்படுகின்றனர் இருவரும். இங்கும் நாம் சுமந்திரனைப் பற்றியே பேச வேண்டியுள்ளது. சுமந்திரன் பெரும்பாலும் யதார்த்த நிலைமைகளோடு இணைந்து அரசியலைப் பற்றிச் சிந்திப்பவர். அதாவது சுமந்திரனுடைய வழிமுறை, சாத்தியமான புள்ளிகளைத் தேடுவதும் ஒருங்கிணைப்பதும் (Finding and integrating potential points) ஆகும். இத்தகைய அணுகுமுறையும் சிந்தனையும் தமிழ் அரசியற் தரப்பில் இருவரிடமே உண்டு. ஒருவர் சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார். இன்னொருவர் சுமந்திரன். சுமந்திரனிடம் அரசியற் போதாமைகளும் குழப்பங்களும் பிரச்சினைகளும் இருந்தாலும் சாத்திய நிலைமைகளைக் குறித்துச் சிந்திக்கும் பண்புண்டு. ஆகவே சுமந்திரனும் இணைந்து உருவாக்கக் கூடிய அரசியலமைப்புக்கோ தீர்வுக்கோ மறுப்பொன்றை – தோற்கடிக்கப்படும் நிலையை – உருவாக்க வேண்டும் என்ற முன்னாயத்தமே இந்த அரசியற் தீர்வைப் பற்றிய தயாரிப்புக்கான ஒருங்கிணைவு என்ற பேரிலான முயற்சியாகும்.

6. சிறிதரன், கஜேந்திரகுமாரின் இணைவு ஒன்றும் புதியதல்ல. இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான். இருவரும் அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் (Extremists). விளைவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாதோர் (Unconcerned about consequences or Don’t care about consequences. சனங்களுடைய அரசியல் வெளிக்கும் தேவைகளுக்கும் வெளியே நிற்போர் (Stay outside the political expression and needs of the people). தம்மைத்தாமே முன்னிலைச் சக்திகளாகப் பிரகடனப்படுத்திக் கொள்வோர். தீர்வுக்கான சாத்தியங்களைத் தடுக்கும் உள்நோக்கோடு, சாத்தியமற்ற விடயங்களை முன்மொழிவோர் (Propose the impossible). விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியைப் பேணும் அரசியலைத் தமது அடையாளமாகக் காட்டுவதற்கு விரும்புவோர். புலிகளின் வரலாற்றோடு தம்மை இணைத்துக் கொள்ளும் பேரார்வம் கொண்டிருப்பவர்கள்.

7. சிறிதரன், கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரையும் விட தமிழ் அரசியற் பரப்பிலும் தமிழ்ப் பிரதேசங்களில் நடக்கின்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் அதிரடி ஆட்டக்காரராக இருப்பவர் மருத்துவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அருச்சுனா. அருச்சுனாவின் மீதே மக்களுடைய – ஊடகங்களின் – ஒளி அதிகமாகக் குவிகிறது. அதை விலக்கித் தம்மீது அந்த ஒளியை விழுத்துவதற்கும் இந்த முயற்சியை ஒரு உபாயமாகக் கொள்கின்றனர்.

ஆகவே, முதலில் கஜேந்திரகுமார் – சிறிதரன் கூட்டு எனப்படுவது சுமந்திரனுக்கு எதிரானதோடு தீர்வைத் தடுப்பதற்கான முன்னேற்பாடாகவுமே உள்ளது. இதற்கப்பால் புதிய உள்ளடக்கமெதையும் கொள்ளவில்லை. குறிப்பாக போருக்குப் பிந்திய அரசியற் சூழலையோ, தற்போதைய யதார்த்த நிலையையோ, சர்வதேச சமூகமும் பிராந்திய சக்தியுமாகிய இந்தியாவையோ புரிந்து கொண்டு செயற்படுவதாகவும் இல்லை. அப்படிச் செயற்பட முயற்சிப்பதாக இருந்தால், ஒட்டு மொத்தமாக உள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தரப்புகளோடு இணைந்து சிறுபான்மைத் தேசிய இனங்கள் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பையும் புதிய அரசியற் சூழலையும் எப்படி எதிர்கொள்வது என்றே சிந்தித்திருப்பர். அதுவே அரசாங்கத்தின் மீது சிறிய அளவிலேனும் நெருக்கடியை உண்டாக்கக் கூடியதாக இருக்கும். இதற்கு வாய்ப்பான சூழலும் தற்போதுதான் உண்டு. வரலாற்றில் முதற்தடவையாக சிறுபான்மைச் சமூகங்களை (Minority Nationalities) பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எவையும் அரசாங்கத்துடன் இல்லாதிருப்பது இதற்கு அருமையான வாய்ப்பை அளிக்கிறது.

ஆகவே இதையெல்லாம் மனதிற் கொண்டு செயற்படுவதே மெய்யான தீர்வுக்கான அரசியல் முயற்சிகளாகும். ஆனால், அதைச் சிறிதரனோ, கஜேந்திரகுமாரோ செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் அதற்கு வெளியிலேயே – சனங்களை மயக்கும் அரசியல் வெளியிலேயே – தமது அரசியலைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த மோசமான பின்னடைவு அரசியல் முனைப்பைத் தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் சக்திகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் தொடக்கத்திலேயே கண்டித்துக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். இதில் ரெலோவுக்குக் கூடுதல் பொறுப்புண்டு. ஏனென்றால், பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கட்சி என்ற வகையில் இந்தக் கூட்டுச் ச(க)திக்குள் ரெலோவை இழுத்து விடக் கூடிய சாத்தியங்களே அதிகமுண்டு.

அரசியலில் தந்திரங்கள் முக்கியம். ஆனால், தந்திரமே அரசியலாக முடியாது. இதற்கு நல்ல உதாரணம், கறிக்கு உப்பு வேணும். அதற்காக உப்பிலே கறியை வைக்க முடியாது.

00

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாமனாரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

east tamil

பஸ்களில் தேவையற்ற உபகரணங்களை அகற்ற 03 மாத கால அவகாசம்

east tamil

பேருந்து ஓட்டுநர்களுக்கான வயது வரம்பு அறிவிப்பு

east tamil

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

Leave a Comment