தெற்குக் கலிபோர்னியாவில் வெகுவாக பரவி வரும் காட்டுத் தீ லொஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீவிபத்தின் வேகம் மற்றும் பரவலினால் வீதிகள் பல மூடப்பட்டுள்ளதுடன், மக்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
10,000 க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்த சுமார் 26,000ற்கும் அதிகமானோர் தீவினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, தீ பரவலின் காரணமாக சுமார் 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சலீஸ் தீயணைப்புத் துறையின் தலைவர் கிறிஸ்டின் குரோலி தெரிவித்துள்ளார்.
மலையடிவார பகுதிகளில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதாகவும், பல மாதங்களாக மழை பெய்யாத நிலை தீயினைனை மேலும் மோசமாக்குவதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு மே மாதம் முதல் தெற்குக் கலிபோர்னியாவில் மழை பதிவானது 0.25 செ.மீ. ஐ விட குறைவாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமத்துடன் போராடி வருவதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கடுமையான காற்று மேலும் தீவினை தீவிரமாக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.